பறிமுதல் செய்யப்பட்ட 121 படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு - கலக்கத்தில் தமிழக மீனவர்கள்

கோப்புப் படம்

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 94 படகுகள் உள்பட இந்திய மீனவர்களின் 121 படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  எல்லை தாண்டி இலங்கைக் கடற்பகுதியில் மீன்பிடித்ததாக குற்றஞ்சாட்டி, தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் உள்ளிட்ட இந்திய மீனவர்களின் நூற்றுக்கணக்கான படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, படகுகளை திருப்பி எடுத்துச் செல்ல இலங்கை அரசு ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், இதுவரை 40 படகுகள் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மீதமுள்ள 121 படகுகள், இலங்கை மீன்பிடி துறைமுகங்கள் அருகே உள்ள பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

  இத்தகைய சூழலில், 121 படகுகள் நீண்ட காலமாக கடலிலேயே கிடப்பதால் கடற்கரை மாசடைவதாகவும், இலங்கை மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி, ஊர்காவல் துறை நீதிமன்றத்திலும், மன்னார் மாவட்ட நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஊர்க்காவல் துறை நீதிமன்றம், 94 படகுகளையும், மன்னார் மாவட்ட நீதிமன்றம் 27 படகுகளையும் அழித்துவிடுவதற்கு அல்லது ஏலத்தில் விடுவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளன.

  இதில் 88 படகுகள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு சொந்தமானதாக இருப்பதால், அப்பகுதி மீனவர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். அழிக்கப்படும் 121 படகுகளில், 94 படகுகள் தமிழக மீனவர்களுக்கு சொந்தமானது.
  இலங்கை நீதிமன்றங்களின் இந்த உத்தரவு தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மீன்பிடி படகுகளை அழிக்காமல் தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.
  Published by:Karthick S
  First published: