Home /News /tamil-nadu /

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசு: மீனவர் சங்கத்தினர் கண்டனம்

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசு: மீனவர் சங்கத்தினர் கண்டனம்

படகுகள்

படகுகள்

இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விட உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் சங்கத்தினர், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்வதோடு அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை அடிக்கடி பறிமுதல் செய்து வருகிறது. கடந்த 2014 முதல் 2018 வரை இலங்கை கடற்படையால் 125 மீன் பிடி படகுகளும், 17 நாட்டுப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, காரைநகர், காங்கேசன் துரை, மயிலட்டி மற்றும் தலைமன்னார் கடற்படை முகாம்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    சுமார் 5 ஆண்டுகளாக மீட்கப்படாமல் உள்ள இந்த படகுகளை ஏலம் விட கடந்த 2020ல் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கொரோனா காரணமாக ஏல நடவடிக்கை தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இலங்கை வசம் உள்ள படகுகள் அடுத்த மாதம் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை அந்தந்த கடற்படை முகாம்களில் ஏலம் விடப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

    ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் இலங்கை மதிப்பில் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்யவும் மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இந்தநிலையில் வேறொரு நாட்டுக்குச் சொந்தமான படகுகளை ஏலம் விடுவது கேலிக்கூத்தானது என ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ், இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்திய மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவது மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள அவமானம் என்று தமிழ்நாடு - புதுச்சேரி மீனவர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் என்.ஜே.போஸ் தெரிவித்துள்ளார்.

    இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு மெத்தனம் காட்டாமல் உடனடியாக எதிர்வினை ஆற்றவேண்டும் எனவும் மீனவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Fishermen

    அடுத்த செய்தி