ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பேரதிசயம்! தமிழர்கள் வரலாற்றைத் தாங்கி நிற்கும் தஞ்சைப் பெரிய கோயிலின் சிறப்பம்சங்கள்

தஞ்சைப் பெருவுடையார் கோயிலும் பெருவேந்தன் ராஜராஜ சோழனும்

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பேரதிசயம்! தமிழர்கள் வரலாற்றைத் தாங்கி நிற்கும் தஞ்சைப் பெரிய கோயிலின் சிறப்பம்சங்கள்
தஞ்சை பெரிய கோயில்
  • Share this:
பிற்கால சோழர்களில் மட்டுமல்ல இந்திய பேரரசர்களில் தனித்துவம் மிக்கவர் ராஜராஜ சோழன். அருண்மொழித் தேவர் என்கிற இயற் பெயரைக் கொண்ட இவருக்கு திருமுறைகண்ட சோழன், நிகரிழிச் சோழன், மும்முடி கண்ட சோழன், சிவபாதசேகரன், சிங்களாந்தகன் உள்ளிட்ட 20 மேற்பட்ட பட்டப் பெயர்களும் உள்ளன.

கி.பி 985-ம் ஆண்டு முதல் 1014ம் ஆண்டு வரை 29 ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தாலும் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் வரலாற்றைக் கொண்டவர். இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் பல திட்டங்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்டுத்தியவர். அதிகாரப் பகிர்வு, வெளிப்படையான நிர்வாகம், வேலை உறுதியளிப்பு, நில அளவை, கோயில்களுக்கு நிரந்தர வருமானம், தமிழ்த் திருமுறைகள் மீட்பு, பின்னர் தமிழ் ஒலிக்க 48 ஒதுவார்கள் நியமனம் என முன்மாதிரி திட்டங்களுக்கு முன்னோடி ராஜ ராஜசோழன்.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட அவரைப் போலவே உயர்ந்து, நிலைத்து நின்று கொண்டிருக்கிறது தஞ்சை பெருவுடையார் கோயில். இக்கோயிலைப் பார்த்தால் மட்டுமல்ல வரலாற்றை படித்தாலே ஆச்சரியங்கள் அணிவகுக்கும்.


பாறைகளே இல்லாத, வயலும் வயல் சார்ந்த மருத நிலப் பரப்பான தஞ்சையில் பல்லாயிரம் டன் பாறைகளைக் கொண்டு, முழுக்க முழுக்க கருங்கற்களால், பெருவுடையார் கோயிலைக் கட்டியது முதல் அதிசயம்.

இக்கோயில் 793 அடி நீளம், 397 அணி அகலத்துடன் சிவனுக்கு பெரிய லிங்கத் திருமேனி, அதற்கு மேல் 216 அடி உயரத்தில், உள்ளீடற்ற விமானம். சிமெண்ட் கலவை பூச்சு இல்லாமல் ஒன்றோன்றைக் கோர்த்து அமைத்துள்ள கோயிலின் நுட்பமான கட்டுமானம் எல்லாம் கட்டுமான பொறியியலின் அதிசயம்.

தென்னாட்டு மலை என்கிற பொருளில் தட்சிண மேரு  என்றழைக்கப்படும் இக்கோயில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களையும் கட்டட அமைப்பில் வைத்து தட்சிணமேரு விடங்கராக பெருமானை அமைத்துள்ளது தனிச்சிறப்பாக உள்ளது.
தஞ்சை பெரிய கோயில்


தனது ஆட்சிக் காலத்தின் 19-வது ஆண்டில் கட்டுமான பணிகளைத் தொடங்கி, 25-வது ஆண்டில் நிறைவு என ஆறு ஆண்டுகளில்(கி.பி 1003-04 முதல்  1009 -10வரை) கட்டி முடிக்கப்பட்டுள்ளது மற்றுமொரு அதிசயம். சரியாக கி.பி 1010 ஏப்ரல் 22-ம் தேதி (சித்திரை 31ம் தேதி) குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளதாக ஒரு கல்வெட்டு சான்று சொல்கிறது.

இப்பெருங்கோயிலைக் கட்டமைத்த தலைமைச் சிற்பியான "வீரசோழன் குஞ்சர மல்லனுக்கு ராஜராஜப் பெருந்தச்சன்"  என்று பெயர் சூட்டி, பங்காற்றியவர்களின் பெயர்களை கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெருவுடையார் கோயிலுக்கு ராஐராஜேஸ்வரம் என்று பெயர் வைத்திருந்தாலும் கோயில் கட்ட பொருளுதவி செய்தோர் பெயர்களையும் "நாம் கொடுத்தனவும் நம் அக்கன் கொடுத்தனவும் மற்றும் கொடுத்தார் கொடுத்தனவும் கல்லில் வெட்டுக (பதிவு செய்க) என்று ஆணையிட்டுள்ளது  பெருவேந்தனின் பெருந்தன்மை மட்டுமல்ல வெளிப்படையாக நிர்வாகத்தின் வெளிப்பாடு.

பெருவுடையார் கோயிலில் பணி செய்த நட்டுவம் செய்வோர், தமிழ்பாடுவோர், கானம் பாடுவோர், மத்தளம் இசைப்போர், சங்கு ஊதுவோர், விளக்குப் பணியாளர், நீர் தெளிப்பவர், துணி வெளுப்பவர், நாவிதர், குயவர்கள் 30-க்கும் மேற்பட்ட பணிகளைச் செய்த 258 பணியாளர்களின் பெயரும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன. அவரவர் பணிகளுக்கு ஏற்ப 2 காணி நிலம் வரை வழங்கப்பட்டுள்ளது.
பெரிய கோயிலுக்கு ராஜ ராஜசோழர் 41,559 கழஞ்சு எடை பொற்கலங்கள், 50, 650 கழஞ்சு எடை வெள்ளிக்கலங்கள், 10, 200 கழஞ்சு எடை அணிகலன்கள், ஆண்டுதோறும் 1, 16,000 கலன் நெல், 1, 100 காசு, வருமானமுள்ள ஊர்களையும் கொடுத்துள்ளார்.

ராஜராஜ சோழரின்  செயல்பாடுகளை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, இலங்கையில் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அவற்றைப் படித்தால் கிடைக்கும் தகவல்கள் வரலாற்றாய்வாளர்களையே ஆச்சரியப்பட வைக்கிறது. ஆகையால்தாதான் இந்தக் கோயிலைப் பாரம்பரியம் மிக்க வரலாற்றுச் சின்னமாக யுனொஸ்கோ அறிவித்துள்ளது.

இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற, ராஜராஜசோழர், "என் காலத்திற்கு பின்னர் நான் அமைத்த நீர் நிலைகளை பராமரிக்கும் மனிதரின் பாதத்தை என் தலையில் தாங்குவேன்" என்று பணிவாய் பதிவு செய்த பெருவேந்தன். ஆகையால்தான் அவரும் அவர் கட்டிய கோயிலும் தமிழர்கள் மனதில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

Also see:


 
First published: February 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்