SPB CHARAN EXPLAINS ABOUT RUMOUR REGARDING SPBALASUBRAMANIAM MEDICAL BILL SKD
எஸ்.பி.பியின் மருத்துவக் கட்டண விவரத்தை வெளியிடுவோம் - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்.பி.பி.சரண்
எஸ்.பி.பி சரண்
எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும், சிகிச்சைக் கட்டணம் குறித்த விவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என்று எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒன்றரை மாதத்துக்கு மேலாக அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 24-ம் தேதி அவர் உயிரிழந்தார். இந்தநிலையில், அவருடைய சிகிச்சைக் கட்டணம் தொடர்பாக பரவும் வதந்தி குறித்து எஸ்.பி.பி.சரண் வீடியோ மூலம் விளக்கம் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ பதிவில், ‘எம்.ஜி.எம் மருத்துவமனை குறித்தும் என் அப்பாவுக்கான சிகிச்சைக் கட்டணம் குறித்தும் சில வதந்திகள் உலவுவது துரதிருஷ்டமானது. சில விஷயங்களை மொத்தமாகத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அப்பா மருத்துவமனையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அப்பா கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலமானார். மொத்தமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறித்து வதந்தி ஒன்று வந்திருக்கிறது. நாங்கள் ஏதோ பணம் கட்டியதாகவும், ஆனால் இன்னும் பணம் பாக்கி இருந்ததாகவும், பின்னர் தமிழக அரசிடம் அதற்காகக் கோரியதாகவும், அவர்கள் மறுத்ததால் குடியரசுத் துணைத் தலைவரிடம் நான் கோரிக்கை வைத்ததாகவும் அவர்கள் உடனடியாக அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் ஒரு செய்தி உலவுகிறது. மேலும் நாங்கள் பாக்கி பணத்தை தரும் வரை அப்பாவின் உடலை எம்ஜிஎம் மருத்துவமனை ஒப்படைக்கவில்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இவை அனைத்தும் சுத்த அபத்தங்கள். பொய்கள்.
இதை ஏன் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர்களை இது எப்படிப் பாதிக்கும் என்பது கூட புரியாமல், பேசித் தெரிந்து கொள்ளாமல் ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. இதுபோன்ற மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது வருத்தத்தைத் தருகிறது. இவர்கள் எஸ்பிபியின் ரசிகர்களாக இருக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் இப்படியான ஒரு காரியத்தைச் செய்ய மாட்டார்கள். அவர்கள் மற்றவர்களைக் காயப்படுத்தவே மாட்டார்கள். இதுபோன்ற வதந்திகளைப் பரப்பும் நபரை எஸ்பிபி மன்னிப்பார். நான் இந்த நபரை மன்னிக்கிறேன். ஆனால், இவர் சற்று முதிர்ச்சியடையவேண்டும். ஒழுங்காக யோசிக்க வேண்டும். சரியான விஷயத்தைச் செய்ய வேண்டும். ஆதாரமில்லாமல் இப்படியான வதந்திகளைப் பரப்பி வருகிறார். என்ன சிகிச்சை, எவ்வளவு கட்டணம் என்று எதுவும் அவருக்குத் தெரியாது.
மருத்துவக் கட்டணம் தொடர்பாக நான் இப்போது எந்த விவரத்தையும் தரப்போவதில்லை. நானும், மருத்துவமனை நிர்வாகமும் இணைந்து சிகிச்சைக் குறித்தும், சிகிச்சைக் கட்டணம் குறித்தும் விரைவில் அறிக்கை வெளியிடுவோம். எம்.ஜி.எம் மருத்துவமனை எனது அப்பாவுக்கு மிகச் சிறந்த சிகிச்சைகளை அளித்தார்கள். நான் ஒவ்வொரு நாளும் மருத்துவமனை செல்வது வீட்டுக்குச் செல்வது போலவே உணர்ந்தேன். மருத்துவமனைக் கட்டணம் குறித்து விரைவில் அறிக்கை வெளியாகும்’ என்று தெரிவித்தார்.