• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு.. 10 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு

எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு.. 10 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு

அதிமுக தொண்டர்கள் போராட்டம்

அதிமுக தொண்டர்கள் போராட்டம்

எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்திய விவகாரத்தில் போராட்டம் நடத்திய 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது எஸ்.பி வேலுமணி தனது பதவியை தவறாக பயன்படுத்தி ஒப்பந்தங்களை தனது சகோதரர் மற்றும் ஆதரவாளர்களுக்கு வழங்கியதாக புகார் எழுந்தது. ஒப்பந்தங்கள் மூலம் முறைகேடு செய்து சொத்து குவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அரசு பணி வாங்கித் தருவதாகக் கூறி 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக எஸ்.பி வேலுமணி மீது சென்னையை சேர்ந்த திருவேங்கடம் என்பவர் புகார் அளித்திருந்தார்.

  இந்த புகார்களின் அடிப்படையில் பல்வேறு ஆவணங்களை திரட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி வேலுமணியின் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனையறிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள், தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் கூடியதால் பதற்றம் நிலவியது. இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமாக தொண்டாமுத்தூரில் உள்ள 5 பண்ணை வீடுகள், ஆர்.எஸ்புரத்தில் உள்ள அலுவலகம் ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

  இதேபோல் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள எஸ்.பி வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் வீடு, நகைக் கடை மற்றும் அவர் நடத்தி வரும் அறக்கட்டளை, வடவள்ளியில் உள்ள அதிமுக நிர்வாகியும், எஸ்.பி வேலுமணியின் ஆதரவாளரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகரன் வீடுகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டன. சந்திரசேகரனின் இல்லத்தில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் அவரை குளத்துபாளையத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக சந்திரசேகரனை பண்ணை வீட்டிற்கு அழைத்து செல்ல அனுமதிக்க மறுத்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  எஸ்.பி வேலுமணியின் ஆதரவாளர்கள் மட்டுமின்றி கோவை மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு தப்பவில்லை. அதன்படி, கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டம், வாகன பராமரிப்பு உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் பணியாற்றிய மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணகுமாரின் வீட்டிலும் சோதனை தொடர்ந்தது. கோவையில் 35 க்கும் மேற்பட்ட இடங்கள் சோதனைக்குள்ளக்கப்பட்ட அதேநேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல்லில் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், ஆதரவாளர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

  இந்த சோதனையின்போது எஸ்.பி வேலுமணி சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் குடியிருப்பில் ‘டி’ பிளாக்கில் தங்கியிருப்பதை அறிந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். மேலும், ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக எஸ்.பி வேலுமணியிடம் 12 மணி நேரத்திற்கு மேலாக துருத்துருவி விசாரணை நடத்தினர்.

  இந்நிலையில் கோவை  உள்ள எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதை தொடர்ந்து அவரது வீட்டிற்கு முன் ஏராளமான தொண்டர்கள் திரண்டு கோஷமிட்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், கந்தசாமி, அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ், பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ஜூனன், ஜெயராமன், கிணத்துகடவு தாமோதரன் ஆகியோர் எஸ்.பி.வேலுமணி வீட்டிற்கு நேரில் சென்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டடனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  இதையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ஜுனன், கிணத்துக்கடவு தாமோதரன், பி ஆர் ஜி அருண்குமார் ,சூலூர் கந்தசாமி, வால்பாறை அமுல் கந்தசாமி, ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், எம்.எஸ்.எம் .ஆனந்தன் உட்பட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் 3 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  மேலும்  கொரோனா கட்டுபாடுகளை மீறியது, கொரோனா நோய்த்தொற்று பரவுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் 520 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேரிகார்டுகளை தூக்கு ஏறிந்து ரகளை செய்தது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடமல் தடுத்தது , பொதுமக்களுக்கு இடையூறு உள்ளிட்ட 2 பிரிவுகளில் 10 பேர் மீதும்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vijay R
  First published: