கேரளம் மற்றும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்க வேண்டிய நிலையில், இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், அரபிக்கடலில் தென்மேற்கு பருவக் காற்று வலுவடைந்திருப்பதாகவும், தெற்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு, குமரிக்கடல் பகுதிகளில் மேகங்கள் அதிகளவு உருவாகியிருப்பதாவும் தெரிவித்தார்.
இதனால், கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.
இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தின் மேற்கு மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை இயல்பாக இருக்கும் எனக் கூறிய புவியரசன், திருவள்ளூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துக் காணப்படும் என்றும் தெரிவித்தார்.
சென்னையில் அடுத்த ஒரு வாரத்தில் வெப்ப நிலை குறையும் என்றும், இதனிடையே, கேரளாவில் கொல்லம், ஆழப்புலா மாவட்டங்களில் 9-ம் தேதியும், திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம் மாவட்டங்களில் 10-ம் தேதியும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால், கேரளாவில் மிக கனமழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று புவியரசன் விளக்கமளித்தார்.
Also watch: அரசு சுகாதார மையத்தில் கொடுக்கப்பட்ட மாத்திரையில் ’கம்பி’.. நோயாளி அதிர்ச்சி!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.