சஷ்டி விரதத்தின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், முருகன் கோவில்களில் கோலாகலமாக நடைபெற்றது. திருச்செந்தூரில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரண்டனர்.
தமிழ்க்கடவுளாக கருதப்படும் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வு சூரசம்ஹாரம் என்று அழைக்கப்படுகிறது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த 8-ம் தேதி சஷ்டி விரதம் தொடங்கிய நிலையில், சூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சி கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் திரளுக்கு நடுவே நடைபெற்றது.
வேல்தாங்கிய படையின் தலைவராக ஜெயந்தி நாதர் வடிவத்தில் முருகன் கடற்கரையில் எழுந்தருளினார். பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் முருகனை வரவேற்றனர். பராசக்தியிடம் வெற்றிவேல் பெற்று வந்த முருகன் முதலில் சூரனின் சகோதரர்களான தாரகாசுரன், சிங்கமுகாசுரன் ஆகியோரை வேல் கொண்டு வதம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து வந்த சூரபத்மனும் முருகனிடம் தோல்வியடைந்து பின்வாங்கினார். பின்னர் சூரபத்மன் மாமரமாக வடிவம் பெற்று நின்றார். மாமரத்தை சேவலாகவும், மயிலாகவும் மாற்றி முருகன் ஆட்கொண்டதை குறிப்பிடும் காட்சியும் நிகழ்த்திக் காட்டப்பட்டது.
சூரசம்ஹாரம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து 6 நாட்களாக மேற்கொண்டு வந்த சஷ்டி விரதத்தை பக்தர்கள் முடித்துக் கொண்டனர். சூரசம்ஹார நிகழ்வையொட்டி திருச்செந்தூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பயணிகளின் வசதிக்காக தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதேபோன்று பழனி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகளிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து முருகனை வழிபட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thoothukudi, Tiruchendur