ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டாஞ்சோறு சமைத்து கும்மியடித்த இளைஞர்கள்.. கும்மிய போலீஸ்..!

Youtube Video

4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 • Share this:
  144 தடை உத்தரவை மீறி கூட்டாஞ்சோறு சமைத்து இளைஞர்கள் கும்மியடித்துள்ளனர். சிக்கிய அவர்களை போலீசார் கும்மிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  கொரோனாவின் விபரீதத்தை உணராமல், ஊரடங்கை மீறி சில காமெடி கலாட்டாக்களும் சத்தமில்லாமல் அரங்கேறி வருகின்றன. நகரப் பகுதிகளில் கொரோனா தொற்று குறித்து ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும் இன்னும் கிராமப் பகுதிகளில் கொரோனாவாவது கிரோனாவாவது என்ற மனநிலையில்தான் மக்கள் உள்ளனர்.

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சால்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளைஞர்களும் சிறுவர்களும் 21 நாள் ஊரடங்கை வித்தியாசமாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். அதையடுத்து சமீபத்தில் அதே பகுதியில் உள்ள கண்மாயில் 15 பேர் கொண்ட கும்பலாகச் சென்று குளித்து கும்மாளம் போட்டுள்ளனர். அப்போது கொரோனாவைக் கிண்டல் செய்து டிக்டாக்கிலும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

  தொடர்ந்து கண்மாயில் மீன்பிடித்து மிளகாய் தடவி ஊறப்போட்டு, சுவையாக கூட்டாஞ்சோறு கறிவிருந்து சமைத்து ஒரு பிடி பிடித்துள்ளனர்.

  மேலும், ஒரு சிறுவன் சாமி வந்ததுபோல் நடிப்பதையும் அவனிடம் கொரோனா எப்போது ஒழியும் என்று குறிகேட்பது போலவும், அவர் இன்னும் 10 நாள் தான் பொறுத்துக்கோ என்று ஆவேசமாகச் சொல்வதுமாக டிக்டாக் பதிவு வெளியிட்டுள்ளனர்.

  இந்த டிக்டாக் வீடியோக்களை அவர்களே அந்தப் பகுதிகளில் பரப்பி விட்டதால் அவை போலீசாரின் பார்வைக்குச் சென்றுள்ளன. இதையடுத்து கூட்டாஞ்சோறு சாப்பிட்டு கும்மியடித்த 15 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்தது போலீஸ்.

  கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக 100 முறை தோப்புக்கரணம் போட செய்தனர். அவர்களில் 11 பேர் பள்ளி மாணவர்கள் என்பதால் அவர்களை எச்சரித்து அனுப்பினர். மீதமுள்ள 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  மேலும், ஊர் மக்களிடையே கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு குறித்து விரிவாக விளக்கம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கொரோனா ஊரடங்கு காலத்திலும் கும்மியடித்தே தீருவோம் என தீர்மானத்துடன் செயல்படும் இவர்களைப் போன்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படப் போவது எப்போது?

  Also see:


  Published by:Rizwan
  First published: