தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் சூழலில், இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சமூக ஊடகங்களின் பங்களிப்பு இந்த தேர்தலில் முக்கியத்துவம் பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களைப் போல் அல்லாமல் குறைந்த வாக்குகளை உள்ளடக்கிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும்போது ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. இதில், வேட்பாளர்கள் வாக்காளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இப்படிபட்ட சூழலில் நொடிப் பொழுதில் லட்சக்கணக்கான மக்களிடம் செய்தியை கொண்டு சேர்க்கும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை தவிர்க்க முடியாது என்கின்றனர் சமூக ஊடக தொழில்நுட்ப நிபுணர்கள்.
பிரசாரம் மேற்கொள்ளும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் செலவு கணக்குகளை கண்காணிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு வழிகாட்டுதல்களை கொண்டிருந்தாலும், சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்வதை கட்டுபடுத்துவது சாத்தியமில்லாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. வேட்பாளரின் பெயர் மட்டுமின்றி அவரது தொண்டர்கள் பெயர்களில் சமூக வலைதளத்தில் தனி பக்கத்தை உருவாக்கி தங்களது தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எளிதில் கொண்டு சேர்க்க முடியும் என்று சமூக ஊடக பகுப்பாய்வாளர்கள் கூறியுள்ளனர்.
வாட்ஸ் அப், பேஸ்புக் மட்டுமின்றி டிக்-டோக், ஹெல்லோ ஆப், ஷேர் சேட் என ஏராளமான செயலிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தளங்கள் மூலம் தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சியினர் முன்னெடுத்துச் செல்வதன் மூலம் எளிதில் மக்களை அணுக முடியும் என்பது ஒருபுறம் இருந்தாலும், சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது.
Published by:Prabhu Venkat
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.