Home /News /tamil-nadu /

ஜெயலலிதா வழியில் சமூக நீதி காக்கப்படும்! ஓ.பன்னீர் செல்வம் உறுதி

ஜெயலலிதா வழியில் சமூக நீதி காக்கப்படும்! ஓ.பன்னீர் செல்வம் உறுதி

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் 21 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

  • News18
  • Last Updated :
ஜெயலலிதாவின் கொள்கையின்படி, சமூக நீதியைக் காக்க நல்ல முடிவு எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிலையில் பின்னடைந்த நிலையில் உள்ள உயர் சாதிப் பிரிவினருக்கு அரசுக் கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்பிலும் 10% சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்த விவகாரம் குறித்து இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ‘பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் 21 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.

பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தில் 69% இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்தி, அதற்கு சட்டப் பூர்வமான அங்கீகாரம் பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா. அவருடைய கொள்கையின்படி, சமூக நீதியைக் காக்க நல்ல முடிவு எடுக்கப்படும். இதுகுறித்து, சட்ட வல்லுநர்களை ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

முன்னதாக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ‘ஜெயலலிதா வகுத்துத் தந்த வழிமுறையின்படி, தமிழக அரசு தொடர்ந்து கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 69 சதவிகித இடஒதுக்கீட்டைக் கட்டிக் காத்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க ஏதுவாக இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவுகள் 15 மற்றும் 16 ஆகியவற்றிற்கு உரிய திருத்தங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி 12.1.2019 அன்று அரசிதழில் அறிவிக்கை செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய சமூக நீதி அமைச்சகம், இந்த இட ஒதுக்கீட்டினை அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஒருவரின் வருடாந்திர குடும்ப வருமானம்
8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ளதன் அடிப்படையிலும், அவருடைய குடும்பத்தின் சொத்துக்களின் அடிப்படையிலும், இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி, தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டுமுறை பாதிக்கப்படாமல், இந்த இட ஒதுக்கீட்டினை இந்தக் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்துவதற்காக, கூடுதல் மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை ஏற்படுத்துவதற்குத் தேவையான கருத்துக்களை அனுப்பி வைக்குமாறு இந்திய மருத்துவக் குழுமம் அனைத்து மாநில அரசுகளிடமிருந்து கோரியுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 24 அரசு மருத்துவக் கல்லூரிகளும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் 3,500 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இந்த இடங்களில், 15 விழுக்காடு இடங்கள், அதாவது 525 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்பட்ட பின்பு, எஞ்சியுள்ள 85 விழுக்காடு இடங்கள், அதாவது, 2,975 இடங்களில், தமிழ்நாட்டில் தற்போது பின்பற்றப்பட்டுவரும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

பொருளாதாரத்தில் நலிவுற்ற இடஒதுக்கீடு பெறாத பொதுப் பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான, இந்திய மருத்துவக் குழுமத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாநில அரசு விண்ணப்பித்தால், கூடுதலாக 1,000 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களைப் பெற வாய்ப்புள்ளது. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 150 இடங்கள் போக தமிழக அரசின் ஒதுக்கீட்டிற்கு 850 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும்.

எனவே, மொத்தமாக மாநில ஒதுக்கீட்டில் வரக்கூடிய 3,825 இடங்களில், 383 இடங்கள் பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டபின், தற்போது நடைமுறையில் உள்ள ஒதுக்கீட்டின் அடிப்படையில், 586 இடங்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கூடுதலாக கிடைக்கும்’ என்று தெரிவித்தார்.

Also see:

Published by:Karthick S
First published:

Tags: O Panneerselvam

அடுத்த செய்தி