முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கொரோனா காலத்திலும் தொடரும் ஆணவக் கொலைகள்: தனிச் சட்டத்தின் தேவைகள் குறித்து விளக்கும் சமூக செயற்பாட்டாளர்கள்

கொரோனா காலத்திலும் தொடரும் ஆணவக் கொலைகள்: தனிச் சட்டத்தின் தேவைகள் குறித்து விளக்கும் சமூக செயற்பாட்டாளர்கள்

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழகத்தில் நடைபெறும் ஆணவக் கொலைகளுக்கு தனிச்சட்டம் தேவை என்று சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

  • 5-MIN READ
  • Last Updated :

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆனால் இந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் தூத்துக்குடி, சிவகங்கை, ஈரோடு என பல்வேறு இடங்களில் ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளன. சாதி அடிப்படையிலான வன்முறை சம்பவங்கள் 60க்கும் மேற்பட்டவை நடைபெற்றிருக்கின்றன.

ஆணவக்கொலைகளை எதிர்கொள்ள தனி சட்டம் தேவை என்ற கோரிக்கையும் மீண்டும் எழுந்திருக்கிறது. ஆணவக் கொலைச் சம்பவங்கள் குற்றவியல் நடைமுறை பிரிவு 174ன் கீழ் சந்தேகத்துக்குரிய மரணம் என்றோ, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 300-ன் கீழ் கொலை என்றோ பதிவு செய்யப்படுகிறது. பெண்கள் நேரடியாக பாதிக்கப்படும் வழக்குகளில் வரதட்சணை கொடுமை சட்டம், பெண்கள் துன்புறுத்தல் எதிர்த்த சட்டம் ஆகியவையும் தலித்துகள் நேரடியாக பாதிக்கப்படும் வழக்குகளில் பட்டியலின சாதியினர்,  பழங்குடிகள்(வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் திருத்தம் 2015 ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த சட்டங்கள் ஆணவக் கொலை வழக்குகளின் சிக்கலான தன்மைக்கு ஏற்றவையாக இல்லை.

தலித் ஆண்-தலித் அல்லாத பெண்ணுக்கு இடையிலான திருமணம்,

தலித் பெண்- தலித் அல்லாத ஆண், தலித் ஆண் -தலித் பெண்

தலித் அல்லாத ஆண்- தலித் அல்லாத பெண் என எந்த வகையான திருமணம்/காதலாக இருந்தாலும் ஆணவக் கொலைகள் நடக்கின்றன. சாதி படிநிலையில் தனக்கு கீழ் என கருதப்படும் எந்த சாதியாக இருந்தாலும் அந்த சாதியினரை குடும்பத்தாராக ஏற்றுக் கொள்ளும் மன நிலை இல்லை என்பதும், பெண்ணின் தேர்வுரிமையை அங்கீகரிக்காத போக்கும் இந்த கொலைகளுக்கான அடிப்படை காரணங்கள் ஆகும்.

இவற்றில் ஒரு தலித் ஆண் ஆதிக்க சாதி பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளும் போது ஆணவக் கொலைகள் கொடூரமாக இருக்கின்றன என்பதையும் செயல்பாட்டாளர்கள் பல்வேறு உதாரணங்களுடன் குறிப்பிடுகின்றனர். இது போன்ற திருமணங்களை மேற்கொள்ளும் ஆதிக்க சாதி பெண் தனது குடும்பத்தினராலேயே கொல்லப்படுகிறாள். பெற்றோர்களும், உடன் பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களே கொலையை திட்டமிட்டு செய்வதால் அவர்களுக்கு எதிராக புகார் கொடுக்க யாரும் முன் வருவதில்லை. மனைவியை அல்லது காதலியை இழந்து வாடும் தலித் ஆண் வழக்கு தொடுத்து வெற்றி பெறுவது என்பது மிக மிக சவாலான காரியமாக இருக்கிறது.

கொலை வழக்குகளை பதிவு செய்யும் இந்திய தண்டனை பிரிவு 300-ன் கீழ் ஆணவக் கொலைகளை சேர்த்து விடலாம் என்று ஒரு பரிந்துரை முன்வைக்கப்படுகிறது. ஆனால் அது தீர்வாகாது என்கிறார் வழக்கறிஞர் அஜிதா. “குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி குற்றம் சாட்டப்பவருக்கு வழங்கப்பட்டிருக்கும் நியாயமான பலன்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன.  குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதியாவார் என்று குற்றவியல் நடைமுறை சட்டம் கூறுகிறது. பெற்றோர் தங்கள் மகள் மீது மிகவும் பாசமிகுந்தவராக இருந்தனர் என்று நண்பர், உறவினர் சாட்சி கூறினால் போதும் வழக்கு பலவீனமாகிவிடும்.

304பி இபிகோவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை வரதட்சணை கொடுமைகள், மரணங்கள் அடுப்பு வெடித்து உயிரிழந்த மரணங்களாக தான் பதிவு செய்யப்பட்டன.  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான போக்ஸோ சட்டம் வந்த பிறகு, அந்த வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படுகின்றன. காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக சொந்த பிள்ளையை கொல்லும் குற்றத்தின் தன்மையை புரிந்து தண்டனை வழங்க கண்டிப்பாக தனிச்சட்டம் தேவை.” என்கிறார்.

ஆணவக் கொலைகள் திட்டமிட்டே செய்யப்படுகின்றன. திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை ஏற்றுக் கொண்டதாக கூறி ஏமாற்றி அழைத்து பின் கொலை செய்வதுண்டு. ஆனால் இத்தகைய கூட்டுச் சதி வகைப்பட்ட குற்றத்தை, உணர்ச்சி வேகத்தில் கொலை செய்ததாக வாதம் முன்வைத்து வழக்கிலிருந்து தப்பிக்க வாய்ப்பாக பயன்படுத்தப்படுகிறது.

ஆணவக் கொலை வழக்கு ஒன்றை வாபஸ் பெற வைக்கப்பட்ட அனுபவம் குறித்து விழுப்புரத்தை சேர்ந்த வழக்கறிஞர் லூசியா, ‘நடந்த கொலைச் சம்பவத்தில் உடலை எரிப்பதை காவல்துறையினரால் தடுக்க முடியவில்லை. எரித்த பிறகு சாட்சிகளை கூட சேகரிக்கவில்லை. எனவே கொலை வழக்கு போட முடியாமல், பிரிவு 306ன் கீழ் தற்கொலைக்கு தூண்டினார்கள் என்று குடும்பத்தார் மீது கணவர் வழக்கு தொடுத்தார். ஆனால் கணவரும் அவரது நண்பர்களும் வீடு புகுந்து சேதம் ஏற்படுத்தியதாக பெண்ணின் குடும்பத்தார் எதிர் வழக்கு தொடுத்தனர். வழக்கு பல ஆண்டுகள் நடந்ததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மன உளைச்சலுக்கும் , அழற்சிக்கும் ஆளாகி வழக்கை வாபஸ் பெற்றனர். இது போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் பாதுகாப்பும், வழக்கை முடிக்க கால நிர்ணயமும் அவசியமாகிறது. இந்த அம்சங்களுடன் கூடிய தனிச்சட்டம் தேவை’ என்று தெரிவித்தார்.

சட்டங்கள் எவ்வளவு வந்தாலும் அதை நியாயமாக அம்லபடுத்துவதே முக்கியம் என்கிறார் மூத்த வழக்கறிஞர் மோகன். “பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியிலின பழங்குடிகள் வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் நல்ல பாதுகாப்பை கொடுத்தாலும் அனைவருக்கும் அந்த சட்டத்தின் மூலம் நீதி கிடைக்கும் சூழல் இல்லை. சமீபத்தில் ஒரு தலித் பெண்ணை ஏமாற்றி அவளை கர்ப்பமாக்கிய சாதி இந்து ஆண் மீதான வழக்கில் காவலர்கள் குற்றப்பத்திரிக்கையை பலவீனமாக பதிவு செய்திருந்தனர். நான் அரசு வக்கீலாக இருந்தாலும் காவலர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டி குற்றப்பத்திரிக்கையை திருத்தி சமர்ப்பிக்க வைத்தேன்’ என்கிறார்.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 300-ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டால் அதிகபட்ச தண்டனை மரணமாகும். பட்டியலின சாதியினர் மற்றும் பட்டியிலின பழங்குடிகள் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனையாகும். எனவே புதிய சட்டங்களை விட இருக்கும் சட்டங்களின் நியாயமான அமல்படுத்துதலே முக்கியம் என்கிறார்.

தலித்துகள் மீதான வன்கொடுமைகளை எதிர்த்து பல வழக்குகளை வாதாடியுள்ள மூத்த வழக்கறிஞர் பி. ரத்தினம்.  ’தீண்டாமையும், சாதிய பாகுபாடும் அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது. எத்தனை சட்டங்கள் வந்த போதிலும் இந்த கொடூரங்கள் தொடர்கின்றன. குற்றங்களை தடுக்க தேவை புதிய சட்டம் அல்ல. சட்டங்களின் முறையான அமல்படுத்துதல். காகிதத்தில் இருக்கும் சட்டத்துக்கு உயிர் கொடுக்கும் காவல்துறையிலும்,  நீதித்துறையிலும் சாதிப்பற்றும் சாதிய பாகுபாடு மேலோங்கி நிற்கும் போது புதிய சட்டம் என்ன மாற்றத்தை கொண்டு வரும்? பட்டியலின சாதியினர் மற்றும் பட்டியிலின பழங்குடிகள் வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது. ஆனால் உயர் நீதிமன்றத்தில் மனு போட்டு, சரண்டர் ஆகி அதன் பின் முன் ஜாமீன் மனு போடுகின்றனர். அதை அன்றே விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று ஜாமீன் பெற்றுவிடுகின்றனர். நியாயமாக இருப்பதற்கு சட்டம் தேவையா? உலக நாடுகளின் சட்டங்களை எல்லாம் அலசி சிறந்த அரசியல் சாசன சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கினார். அதை தூக்கி எறிந்து விட்டனர். நியாயமான வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் இந்த சூழலில் மன உளைச்சலுக்கு ஆளாவது தான் மிச்சம். மாறுகிற சமுக சூழலுக்கு ஏற்ப சட்டத்துக்கு விளக்கம் கூற வேண்டும். அனைத்தையும் இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்டவர் பக்கம் நின்று வாதாட வழக்கறிஞர்கள் இல்லை’ என்று தெரிவித்தார்.

ஆணவக் கொலைகளையும் சாதி கொடுமைகளையும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆவணப்படுத்தி, தலித்துகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் எவிடன்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் கூறும்போது, “ சங்கர்-கவுசல்யா வழக்கில் தீர்ப்பு வரும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். விசாரணையின் போது வழக்கு பலவீனமாகாமல் இருக்க இது மிக அவசியம். ஆனால் இது எல்லா வழக்கிலும் நடைபெறுவதில்லை. தனிச்சட்டம் இருந்தால் இந்த அம்சங்களை கட்டாயமாக்கலாம் . ஆணவக் கொலைகள் மட்டுமல்லாமல் பல விதமான சித்ரவதைகள், ஆணவ தற்கொலைகள் கூட நடக்கின்றன. எனவே ஆணவக் குற்றங்களை முழுமையாக கையாளக் கூடிய சட்டம் தேவை. ஊரடங்கு காலத்திலும் தலித்துகளுக்கு எதிராக 60க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்துள்ளன. இதில் மூன்று ஆணவக் கொலைகளாகும்.”என்கிறார்.

ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டத்துக்கு 200% தேவை உள்ளதாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் சாமுவேல்ராஜ் கூறுகிறார்.  இதுகுறித்து அவர், ‘பொதுவாக கொலை வழக்குகளில், கொல்லப்பட்டவரின் குடும்பத்தார் குற்றவாளியை தண்டித்தே ஆகவேண்டும் என்ற உணர்வோடு நடந்துகொள்வார்கள். சாட்சிகள் பிறழாது. ஆனால் ஆணவக் கொலைகளில் மகளை இழந்து வாடும் தாய் தன் கணவனுக்கும் மகனுக்கும் எதிராகவா சாட்சி சொல்லப் போகிறார்? யாராவது புகார் கொடுத்தால் தானே பிரிவு 300 கீழ் கொலை வழக்காக பதிவு செய்ய முடியும்? நான் வளர்த்த மகள், என் உடைமை, நானே அழித்தேன். இதில் எங்கிருந்து வந்தது சட்டம் என்ற மனப்போக்கை எதிர்கொள்ள தனிச்சட்டம் வேண்டாமா? மகள் தனக்கு பிடித்தமான ஆணுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள் என்று தெரிந்தவுடன் மகள் கடத்தப்பட்டுவிட்டாள் என்று தந்தை புகார் அளிப்பார். அந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆணின் குடும்பத்தினரை காவல்துறையினர் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றனர். மகளை தேடி கண்டு பிடித்து தந்தையிடம் ஒப்படைக்கிறார் அந்த காவல் அதிகாரி. பெண்களை இப்படி குடும்பத்திடம் ஒப்படைத்த பிறகு தான் பல ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. ஆணும் பெண்ணும் காவல் நிலையத்தில் திருமண விருப்பம் தெரிவித்தால் அவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கக் கூடாது என் தனிச்சட்டத்தில் கேட்பதற்கு காரணம் இதுவே" என்கிறார் அவர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 2016-ம் ஆண்டு ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான ஒன்பது வழிகாட்டுதல்களை வழங்கியது. அதில் பாதுகாப்பு கோரும் காதலர்களுக்கு சிறப்பு செல் அமைத்து அவர்களது புகார்களை பெற்று உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் பல மாதங்களாக அந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடுத்தது. அந்த வழக்கில், ‘அனைத்து மாவட்டங்களிலும் இந்த செல் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களின் தொடர்பு எண்களையும் நீதிமன்றத்தில் அரசு பதிலளித்தது. அந்த எண்களை தொடர்பு கொண்டால் அந்த அதிகாரிகளுக்கே இப்படி ஒரு சிறப்பு செல் அமைக்கப்பட்டிருப்பது தெரியவில்லை" என்கிறார் சாமுவேல்ராஜ்.

இந்தியாவில் ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் வேண்டும் என்றும் அதற்கான அம்சங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்றும் சட்ட ஆணையம் 2012ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அரசுக்கு ஓர் அறிக்கை அளித்தது. அதில் சாதி பஞ்சாயத்துகளை கட்டுப்படுத்தவும் தண்டிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.  விருப்பமுள்ள ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதை எந்த வகையிலும் தடுத்து, அவர்களை துன்புறுத்தும் சாதிப் பஞ்சாயத்துகளை நடத்துவோர், அதில் பங்கேற்போர் அல்லது சாதிப் பஞ்சாயத்துகளின் பேச்சை கேட்டு இந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் தண்டனையும் 30 ஆயிரம் அபராதமும் விதிக்கலாம் என பரிந்துரைத்தது.

இந்த அறிக்கையின் நிலை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது அமைச்சர் நித்தியானந்த் ராய் தேசிய குற்ற ஆவணத்தின் படி இந்தியாவில் 2017ம் ஆண்டு குஜராத்தில் ஒரு ஆணவக் கொலையும் அடுத்த ஆண்டு டெல்லியில் ஒரு ஆணவ கொலையுமே பதிவாகியுள்ளன என பதிலளித்துள்ளார்.

2010ம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையம் கௌரவம் மற்றும் கலாச்சாரத்தின் பெயரில் நடைபெறும் குற்றங்களை தடுக்கும் சட்டம் என்ற வரைவு மசோதாவை தயாரித்து அரசிடம் சமர்ப்பித்தது. அதில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து ஆணும் பெண்ணும் நீதிபதி முன் வாக்குமூலம் அளித்துவிட்டால் அவர்கள் மீது யாரொருவர் கொடுக்கும் புகாரின் பேரிலும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கூறியது. இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

2015ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்ட வரைவை சட்டமன்றத்துக்கு அளித்தது. அதில் ஆண் -பெண் தங்கள் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை தடுக்கும் எந்தவித துன்புறுத்தலும் வன்முறைகளும் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட வேண்டும் என்று கூறியது. குற்றத்தை தடுக்க சந்தேகப்படும் நபர்கள் சந்திப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட குற்றவியல் நடுவர் தடை விதிக்கலாம். திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கும் வாக்குமூலம் தம்பதிகளிடமிருந்து பெற்று அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை தவிர்க்க வேண்டும். குற்றச் செயல் நடக்கும் என தெரிந்து செயல்படாத அதிகாரிகள், புகார் அளிக்காத பகுதிவாசிகள் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று வரைவு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு மாநிலங்களவையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் விஜய்சாய் ரெட்டி ஆணவக் கொலைகளுக்கான எதிரான தனி நபர் மசோதாவை தாக்கல் செய்தார்.

2019ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலம் ஆணவக் கொலைகளுக்கான எதிரான தனிச் சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இந்தியாவில் இந்த சட்டத்தை இயற்றிய முதல் மற்றும் ஒரே மாநிலம் ராஜஸ்தான் ஆகும். “பெண்ணுரிமை இயக்கங்கள், பல்வேறு அமைப்புகளின் பல ஆண்டு கால போராட்டங்களுக்கு பின் இந்த சட்டம் மாநில அரசால் நிறைவேற்றப்பட்டது. ஆனால் குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக ஒராண்டு காலமாக அந்தச் சட்டம் காத்துக் கிடக்கிறது. ஊரடங்கு காலத்திலும் சாதி பஞ்சாயத்துகள் நேரடியாக தலையிட முடியாவிட்டாலும் மறைமுக தாக்கத்தால் ஆணவக் கொலைகள் நடைபெற்று கொண்டு தான் உள்ளன.” என்கிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ராஜஸ்தான் மாநில தலைவர் சீமா ஜெயின்.

தனிச்சட்டம் கொண்டு வருவதற்கான பல்வேறு தரப்பினர் பல முயற்சிகள் எடுத்த போதும் அது இன்னமும் நிறைவேறவில்லை. தனிச்சட்டம் இல்லாவிட்டாலும் தற்போது இருக்கும் சட்டங்களின் மூலம் கிடைக்க வேண்டிய நியாயமான பலன்கள் ஆணவக் கொலைகளால் பாதிக்கப்பட்டவருக்கு கிடைப்பதில்லை.

இதுபற்றி முன்னாள் நீதிபதி கே .சந்துரு பேசும்போது, “இந்திய தண்டனை சட்டம் எந்தவொரு குற்றத்தையும் தனி நபர் அல்லது கூட்டு சதி என்று தான் பாருக்கும். ஆனால் இவை ஒரு சமூகமாக நடைபெறும் குற்றமாகும். சாதிய அமைப்புகள் பள்ளிதோறும் சென்று நாங்கள் வேறு சாதி ஆண்களை திருமணம் செய்து கொள்ள மாட்டோம் என மாணவிகளை உறுதிமொழி எடுக்க வைக்கின்றனர். சட்டம் என்பது நாகரீக சமூகத்தின் குறியீடாகும். அதன் மூலம் நீங்கள் எந்த பக்கம் என்று நிலைபாட்டை எடுக்க வைக்கிறோம்’ என்றார்.

First published:

Tags: Honor killing