• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நல்ல பாம்புகளை வைத்து பூஜை செய்த பெண் சாமியார் கைது

நல்ல பாம்புகளை வைத்து பூஜை செய்த பெண் சாமியார் கைது

  • Share this:
    காஞ்சிபுரத்தில் பெண் சாமியார் ஒருவர் சர்ப்ப சாந்தி பூஜை என்ற பெயரில் பாம்புகளை வைத்து நாக பூஜை செய்து சர்ச்சையில் சிக்கி தற்போது கைதாகியுள்ளார். 

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வெள்ளரி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கபிலா, 19 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் வட பத்ரகாளி அம்மனுக்கு கோவில் கட்டியுள்ளார். பட்டதாரியான இவர், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வருகிறார்.

    இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்திய போது, நல்ல பாம்புகளை வைத்து சர்ப்ப சாந்தி என்னும் பெயரில் நாக பூஜை செய்துள்ளார்.

    அத்துடன், நல்ல பாம்பை தனது கழுத்தில் தொங்கவிட்டு, காண்போரை அச்சம் கொள்ள வைத்தார்.

    பாம்பை வைத்து பக்தர்களிடம் பணம் பறிப்பதாக பெண் சாமியார் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், 2018-ம் ஆண்டு நடைபெற்ற சர்ப்ப சாந்தி பூஜைக்காக மட்டும் பாம்புகள் வரவழைக்கப்பட்டு பூஜை செய்ததாக கபிலா தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், சமூக வலைதளங்களில்  வீடியோ பரவியதையடுத்து சென்னை மண்டல தலைமை வனப் பாதுகாவலருக்கு கிடைத்த தகவலின்படி,  காஞ்சிபுரம் மாவட்ட வன துறை அதிகாரிகள், பெண் சாமியார் கபிலாவிடம் நாக பூஜை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் கோவிலின் விளம்பரத்திற்காக 2018 ஆண்டு  நாக பூஜை செய்ததை பெண் சாமியார் ஒப்புக்கொண்டார்.

    இதைத் தொடர்ந்து பெண் சாமியார் கபிலாவை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

    நல்ல பாம்பை வைத்து பூஜை செய்தது குற்றம் என்பது தெரியாமல் செய்துவிட்டதாக பெண் சாமியார் தெரிவித்தாலும் தமிழ்நாடு வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் என்பதால் அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கோவிலில் வைத்து நாக பூஜை செய்த பெண் சாமியார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: