SMART VILLAGE PROJECT TO IMPROVE FISHERMENS VILLAGES UNION FISHERIES MINISTER GIRIRAJ SINGH ARU
மீனவர் கிராமங்களை மேம்படுத்த ஸ்மார்ட் வில்லேஜ் திட்டம்: மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்
மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்
ஸ்மார்ட் சிட்டி திட்டம் போன்று மீனவர் கிராமங்களை மேம்படுத்த ஸ்மார்ட் வில்லேஜ் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பேசினார்.
கடல் அட்டை எடுப்பதற்கான தடையை நீக்க உத்தரவாதம் அளிக்கக்கோரி வலியுறுத்திய முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா- பேசிக்கொண்டிருக்கும் போதே பாதியில் எழுந்து செய்து தருகிறேன் என கூறிச்சென்ற மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குப்புராமுவை ஆதரித்து மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ராமேஸ்வரத்தில் நேற்று மீனவர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்நிலையில் இன்று பாரதி நகரில் உள்ள அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிருமான அன்வர் ராஜாவை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் நேரில் சென்று சந்தித்து பேசினார். தொடர்ந்து மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும். ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும்.
ராமேஸ்வரம் மீனவர்களின் முக்கிய பிரச்சினையாக உள்ள கச்சத்தீவு பிரச்சனை சுருக்குமடி வலை பிரச்சனை மற்றும் மீனவர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மோடி அரசு பதவியேற்ற பிறகு தான் வெளிநாட்டில் இருந்து 2000 மீனவர்கள் சொந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். கடல்சார் பொருட்களை வைத்து 20 மில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் அளவிற்கு தமிழகத்தில் தொழிற்சாலைகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கடலில் கடல் அட்டைகள் எடுப்பதற்கு உள்ள தடையை நீக்குவது குறித்து ஆய்வு செய்யப்படும். வளர்ச்சியடைந்த நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படுவது போல மீனவர் கிராமங்களை மேம்படுத்த ஸ்மார்ட் வில்லேஜ் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார்.
பின்னர் அதிமுகவிற்கு வாக்களித்தாலும் பாஜக தான் ஆளும் என எதிர்க்கட்சி விமர்சனம் செய்வது குறித்து மத்திய அமைச்சரிடம் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு அதற்கு அவர் பதிலளிக்க மாட்டார் நாங்கள் பேச வேண்டும் என கடிந்து கொண்டார் அதிமுக முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா.