Home /News /tamil-nadu /

ஒரே மேடையில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்... மாறி மாறி ஒலித்த கோஷம்!

ஒரே மேடையில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்... மாறி மாறி ஒலித்த கோஷம்!

முதல்வர் ஸ்டாலின் - பிரதமர் மோடி

முதல்வர் ஸ்டாலின் - பிரதமர் மோடி

நேற்று சென்னை நடந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போற்றியும் தொண்டர்கள் மாறி மாறி கோஷங்களை எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

  தமிழகத்தில் 31,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். தனி விமானம் மூலம், மாலை 5 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவரை ஆளுநர்ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

  அதனைத் தொடர்ந்து, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் வரவேற்றனர். மோடியின் வருகையை முன்னிட்டு, பாஜக சார்பில் விமான நிலைய வளாகத்தில் மேள, தாளங்கள் முழங்க பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

  பின்னர், சென்னை விமான நிலையத்திலிருந்து ஐ.என்.எஸ்., அடையாறு கடற்படைத் தளத்திற்கு, ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து, நேரு உள்விளையாட்டரங்கிற்கு காரில் சென்ற பிரதமர் மோடிக்கு வழியெங்கிலும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  வழி நெடுக பாஜக தொண்டர்கள் காவி நிற ஆடைகளை அணிந்தும், பச்சை மற்றும் ஆரெஞ்ச் நிற பலூன்களை கைகளில் ஏந்தியும் ஆரவாரத்துடன் கோஷங்களை எழுப்பியபடி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, சிவானந்தா சாலையில் காரின் கதவை திறந்து அதிலிருந்து எழுந்து நின்ற பிரதமர் மோடி, பொதுமக்களை நோக்கி கையசைத்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

  அதனைத் தொடர்ந்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி - முதலமைச்சர் ஸ்டாலின் இருவரும் ஒரே மேடையில் கலந்துகொண்டனர். அப்போது, அரங்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தியும், போற்றியும் பாஜகவினர் கோஷம் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து, திமுக தொண்டர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போற்றி கோஷங்களை எழுப்பினர். இவ்வாறு மாறி மாறி கோஷம் எழுப்பியதால் அரங்கத்தில் பரபரப்பு நிலவியது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. அதன்பின்னர், 6 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவைத்து, முடிவுற்ற 5 திட்டங்களை தொடங்கிவைத்தார். புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழ் மொழி நிரந்தரமானது என்றும், தமிழ் கலாசாரம் உலகளாவியது எனவும் கூறினார். தமிழர்களின் மக்கள், கலாசாரம், மொழி என அனைத்தும் தலை சிறந்தது என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார். முன்னதாக தமிழில் உரையை துவங்கிய மோடி, பாரதியார் பாடிய செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற கவிதையை நினைவு கூர்ந்தார்.

  Must Read : டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட முகமைகளால் நடத்தப்படும் கட்டாய தமிழ் தகுதித்தேர்வு.. இவர்களுக்கு மட்டும் விலக்கு: தமிழக அரசு அறிவிப்பு

  பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்தியாவின் வளர்ச்சியிலும், ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களிலும் தமிழ்நாடு மிக முக்கிய பங்களிப்பை தருகிறது என்று குறிப்பிட்டார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் 9.22 சதவிகிதமும், மொத்த ஏற்றுமதியில் 8.4 சதவிகிதமும் பங்கு வகிப்பதாக முதலமைச்சர் கூறினார். எனவே தமிழகத்திற்கு மத்திய அரசு உரிய நிதியை வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
  Published by:Suresh V
  First published:

  Tags: BJP, DMK, MK Stalin, Narendra Modi

  அடுத்த செய்தி