கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசனை நோக்கி செருப்பு, முட்டை, கல் வீசப்பட்டது. அதனால், கரூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரத்தின்போது, நாதுராம் கோட்சே குறித்து கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனையடுத்து, இரண்டு நாள்கள் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. நேற்று, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பல்வேறு பகுதிகளில் வாகனத்தில் சென்றபடியே பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவருக்கு, வழக்கைவிட அதிகமான அளவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
நேற்று, கமல்ஹாசன் திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். இந்தநிலையில், இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டம் முடிந்து, அவர் கீழே இறங்கும்போது அவரை நோக்கி ஒரு கும்பல் செருப்பு, கற்கள், முட்டைகளை வீசினர். ஆனால், செருப்பு, கல் போன்றவை கமல் மீது படவில்லை. கற்களை வீசியவர்கள் மீது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் சராமாரியாக தாக்குதலில் ஈடுபட்டார்கள். கற்களை வீசியவர்கள் கடும் தாக்குதலுக்கு உள்ளானார்கள். பின்னர், அங்கு கூடியிருந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு அருகிலிருந்த ஹோட்டலில் தங்கவைத்தனர்.
அதனையடுத்து, கற்களை வீசிய கும்பல் அனைவரையும் கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சினேகன் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனால், கரூர் அரவக்குறிச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.