சிவகங்கையில் ஆன்லைன் பாடச்சுமையால் மாணவி தற்கொலை... தனியார் பள்ளியின் கெடுபிடியால் விபரீதம்

தனது பெற்றோருடனும் தம்பியுடனும் பேசக் கூடநேரம் இல்லாத அளவிற்கு சுபிக் ஷாவிற்குப் பாடச் சுமை அதிகரித்துள்ளது.

சிவகங்கையில் ஆன்லைன் பாடச்சுமையால் மாணவி தற்கொலை... தனியார் பள்ளியின் கெடுபிடியால் விபரீதம்
தற்கொலை செய்து கொண்ட மாணவி
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 8:51 AM IST
  • Share this:
சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனி்சாமியின் கையால் பேச்சுப்போட்டியில் சான்றிதழ் பெற்ற, 10ம் வகுப்பு மாணவி ஒருவர், ஆன்லைன் பாடச் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள செல்லப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. துபாயில் வேலை செய்து வந்த இவர், கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் சொந்த ஊர் திரும்பி விட்டார். சத்தியமூர்த்தியின் மூத்த மகள் தான் 15 வயதான சுபிக் ஷா; இவர் மதுரை காமராஜர் சாலையில் உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்

தினசரி வாட்ஸ் ஆப்பில் பாடங்கள் மற்றும் வீட்டுப் பாடங்கள் அனுப்பப்பட்டதால் ஆரம்பத்தில் உற்சாகமாக படிக்கத் தொடங்கினார் சுபிக் ஷா. கடந்த 2 மாதங்களாக பாடங்களின் எண்ணிக்கை மற்றும் வீட்டுப் பாடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால், அதிகாலை நாலரை மணிக்கு எழும் சுபிக் ஷா இரவு 11 மணி வரை பள்ளிப் பாடங்களுடனேயே பொழுதைக் கழிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.


ஒருகட்டத்தில் தனது பெற்றோருடனும் தம்பியுடனும் பேசக் கூடநேரம் இல்லாத அளவிற்கு சுபிக் ஷாவிற்குப் பாடச் சுமை அதிகரித்துள்ளது. ஆனால் இதுபற்றி எல்லாம் தனது பெற்றோரிடம் எதையும் சுபிக் ஷா கூறவில்லை. இந்த நிலையில், 14ம் தேதி இரவு 11.30 மணிக்கு அனைவரும் துாங்கிய பின் வீட்டின் பின்புறத்தில் உள்ள கழிவறையில் சுபிக் ஷா துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பின்னால் சென்ற சிறுமி வெகுநேரமாகியும் வராததால் பெற்றோர் சென்று பார்த்தபோது துாக்கில் சடலமாகத் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது, சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

2017ம் ஆண்டு எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவி சுபிக் ஷா. அப்போது நடந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கையால் சான்றிதழ் பெற்றுள்ளார். நன்றாகப் படிக்கும் மாணவியான சுபிக் ஷாவிற்கு, அவரது பள்ளிப் பாடங்கள் தந்த கொடூரமான மனஅழுத்தமே அவரைத் தற்கொலைக்குத் துாண்டியுள்ளது.மாணவர்கள் தங்கள் பிரச்னைகளை பெற்றோரிடம் மனம் திறந்து கூறுவதன் மூலம் மன அழுத்தத்தின் தாக்கத்தில் இருந்து சிறிது விடுபட முடியும். பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் மனஅழுத்தத்தைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு கவுன்சிலிங் எனப்படும் மனநல ஆலோசனை வழங்கி அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். மாறாக தற்கொலை ஒன்றே தீர்வு என்ற மோசமான முடிவை நோக்கி மாணவர்கள் செல்லக் கூடாது என மனநல மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.பள்ளி, கல்லுாரிகளைத் தாண்டி வாழ்க்கை உள்ளது என்ற நம்பிக்கையையே இன்றைய மாணவர்களுக்கு சமுதாயம் ஊட்ட வேண்டும்; அது ஒன்றே விபரீத முடிவுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading