ஆண்டுதோறும் சித்திரை மாதம்,
சிவகங்கை மாவட்டம் தவசியேந்தல்பட்டி கிராமத்தில் உள்ள மறத்தியம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவிற்காக தவசியேந்தல்பட்டி கிராமத்தில் பிறந்து, திருமணமாகி வெளியூர்களில் வசிக்கும் பெண்களை வரவேற்கும் விதமாக இத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தவசியேந்தல்பட்டி கிராமத்தை பூர்வீகமாக கொண்டு வெளியூரில் திருமணமான பெண்கள் ஒரே கலரில் சேலை அணிந்து கிராம வழக்கப்படி சீர் வரிசை எடுத்து வந்து குடும்பத்துடன் பங்கேற்கின்றனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பங்கேற்கும் புகுந்த வீட்டு பெண்களுக்கு ஒரே நிறத்திலான சேலை கிராமத்து சார்பில் வழங்கப்படுகிறது.
ஊர் எல்லையில் அமைந்துள்ள மறத்தியம்மன் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க, வண்ணவண்ண பூக்களை தட்டுகளில் ஏந்தி பிறந்த வீட்டு பெண்களை ஊர்வலமாக அழைத்து வருகின்றனர். பின்னர் அவர்களுடன் கிராமத்து பொது இடத்தில் அமர்ந்து அனைவரும் உணவு அருந்தி மகிழ்கின்றனர். முதல்நாள் சைவ விருந்தாகவும், மறுநாள் அசைவ விருந்தாகவும் கிராமத்து சார்பில் விருந்து நடைபெறுகிறது.
இவ்விழாவின் போது பிறந்த வீட்டுப் பெண்கள் ஒரு நிறத்திலான ஆடைகளையும், அவர்களை வரவேற்கும் புகுந்துவிட்டு பெண்கள் வேறு வண்ணத்திலான ஆடைகள் அணிந்து பங்கேற்பது கூடுதல் சிறப்பாகும். தொடர்ந்து கடும் விரதம் இருந்து கருப்பசாமி அழைக்கப்பட்டு சாட்டையடித்து ஆணி கால் செருப்பு அணிந்து ஆட்டம் ஆடி அரிவாள் மீது ஏறி நின்று குறி சொல்லும் விழா நடந்தது இவ்விழா இரண்டாம் நாள் இரவுடன் நிறைவுபெறுகிறது.

தவசியேந்தல்பட்டி கிராம மக்கள்
Must Read : ‘மாமா’ என்ற அபயக்குரல்.. 10 ஆண்டு பகை மறந்து ஓடோடி வந்து உயிரிழந்த உறவு - தஞ்சை களிமேட்டில் துயரம்!
உறவுகளை பிரிந்து நகரில் வாழும் இந்த நவீன காலத்திலும், பிறந்த வீட்டுப் பெண்களை குடும்பத்தாருடன் அழைத்து ஊரே விருந்து அளித்து உபசரிக்கும் நிகழ்வு இன்றும் பழமை மாறாமல் இதுபோன்ற குக்கிராமங்களில் தொடர்ந்து வருவது பாராட்டத்தக்கது.
செய்தியாளர் - முத்துராமலிங்கம், காரைக்குடி.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.