Home /News /tamil-nadu /

Exclusive: தமிழ்நாட்டின் ஒரே ஸ்பைசஸ் பூங்கா: 2,000 பேருக்கு வேலை.. சிவகங்கை மக்களின் நீண்ட காத்திருப்புக்கு விரைவில் முடிவு

Exclusive: தமிழ்நாட்டின் ஒரே ஸ்பைசஸ் பூங்கா: 2,000 பேருக்கு வேலை.. சிவகங்கை மக்களின் நீண்ட காத்திருப்புக்கு விரைவில் முடிவு

Sivagangai Sppices Park

Sivagangai Sppices Park

Sivagangai Spices Park: சிவகங்கை ஸ்பைசஸ் பார்க் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? இதன் நோக்கம் என்ன? இதன் செயல்பாடு எப்படி இருக்கும்? என இப்பூங்காவின் பண்ணை மேலாளர் திரு.போஸ் அவர்களை சந்தித்து பேசினோம்..

இந்தியாவில் விளையும் ஏலக்காய், மிளகு, மஞ்சள், கிராம்பு போன்ற நறுமணப்பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைப் பணிகளுக்கான தனி அமைப்பாக இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் (Spices Board of India) இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் அமைச்சகத்தால் நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 6 ஸ்பைசஸ் பூங்காங்கள் நிறுவப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி பகுதிகளில் இரண்டு பூங்காங்கள் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் ஒரே ஸ்பைசஸ் பூங்கா சிவகங்கையில் நிறுவப்பட்டிருப்பது இம்மாவட்டத்துக்கு கிடைத்துள்ள தனிச்சிறப்பாகும். 2013ம் ஆண்டு இப்பூங்கா கட்டமைக்கப்பட்டு திறக்கப்பட்ட போதிலும், நகர திட்டமிடல் அனுமதி கிடைக்காத காரணத்தினால் கடந்த 8 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் இருந்து வந்தது. செயல்படாமல் இருந்து வந்த காரணத்தால் இப்பூங்காவில் நிறுவப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் பராமரிப்பின்றி பழுதடைந்து போயிருந்தன.

இந்த பூங்கா செயல்படுவதற்கான அனுமதி தற்போது கிடைத்திருக்கும் நிலையில், மேற்கொண்டு காலதாமதமின்றி விரைவில் இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் பணிகள் துரிதப்பட்டுள்ளன. மின்சாரம், இயந்திரங்களின் பராமரிப்பு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

சிவகங்கை ஸ்பைசஸ் பார்க் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? இதன் நோக்கம் என்ன? இதன் செயல்பாடு எப்படி இருக்கும்? என இப்பூங்காவின் பண்ணை மேலாளர் திரு.போஸ் அவர்களை சந்தித்து பேசினோம்..

பண்ணை மேலாளர் போஸ்


சிவகங்கை ஸ்பைசஸ் பூங்கா குறித்து..

சிவகங்கை ஸ்பைசஸ் பூங்காவானது சிவகங்கையை அடுத்த கொட்டகுடி பகுதியில் சுமார் 73.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் அதிகம் விளையும் மஞ்சள் மற்றும் மிளகாய் போன்றவற்றை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து இங்கு கொண்டு வந்து அவற்றை மதிப்பூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதே இப்பூங்காவின் பிரதான பணியாகும். இதற்காக தனியார் நிறுவனங்களுக்கு ஒரு ஏக்கர் வீதம் 31 ஏக்கர் பிரித்தளிக்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளன. 18 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடாகி இருக்கிறது. இந்நிறுவனங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகங்களில் கவனம் செலுத்துவார்கள். இதன் மூலம் நாட்டுக்கு அந்நிய செலாவணி அதிகரிப்பதுடன், தொழில் முனைவோர்கள் உருவாக்கப்படுவதுடன், சிவகங்கை பகுதியினருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 2,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இங்கு நிறுவப்பட்டுள்ள இரண்டு அரவை இயந்திரங்களும், ஒரு மணி நேரத்துக்கு தலா 500 கிலோ மஞ்சள், மிளகாய் அரைக்கும் திறன் கொண்டவை.

Sivagangai Spices Park


இங்கு தனியார் நிறுவனங்களுக்கு சுமார் ஒரு ஏக்கர் வீதம் 25 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடப்படுகிறது. ஒரு ஏக்கர் வீதம் 18 நிறுவனங்களுக்கு பிளாட்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. இன்னும் 12 பிளாட்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கபட உள்ளது. மெஷின்கள் வாங்குவதற்காக ஒரு கோடி ரூபாய் வரை ஸ்பைசஸ் வாரியத்தால் நேரடி மானியம் அளிக்கப்படுகிறது. இது தவிர MSME, TIIC போன்ற அமைப்புகளும் கடனுதவி வழங்குகின்றன. இன்னும் ஓரிரு மாதத்தில் குத்தகை பெற்ற நிறுவனங்கள் கட்டுமானத்தை தொடங்கி இந்த ஆண்டின் இறுதிக்குள் செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த பூங்கா மூலமாக சிவகங்கை மாவட்டம் தொழில் வளர்ச்சியை பெறும், மேலும் உள்ளூர்வாசிகளும் வேலைவாய்ப்பை பெறுவார்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குடோன் பகுதி


சிவகங்கை ஸ்பைசஸ் பூங்காவை செயல்பாட்டுக்கு கொண்டு வர ஸ்பைசஸ் போர்டு செயலாளர் திரு.D.சத்யன் மற்றும் மாவட்ட நிர்வாகம் உதவி வருவதாக பண்ணை மேலாளர் போஸ் தெரிவித்தார்.

ஸ்பைசஸ் பூங்கா விரைவில் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பதே சிவகங்கை மக்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
Published by:Arun
First published:

Tags: Sivagangai

அடுத்த செய்தி