உயிரிழந்த தனது செல்ல நாயின் நினைவாக
சிவகங்கையை சேர்ந்த முத்து என்பவர் சிலை வைத்துள்ளார். இதனை அங்குள்ளவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் முத்து. 82 வயதாகும் இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியராக உள்ளார். முத்து தனது பண்ணை வீட்டில் டாம் என்ற நாயை மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்தார். கடந்த ஆண்டு நோயால் பாதிக்கப்பட்ட டாம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து செல்ல நாயின் நினைவாக முத்து சிலை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது- 2010-ம் ஆண்டில் இருந்து டாமை வளர்த்து வந்தோம். என் பிள்ளைகளை விட டாமின் மீதுதான் நான் அதிக பாசம் வைத்திருந்தேன். துரதிருஷ்டவசமாக 2021-ல் டாம் உயிரிழந்து விட்டது. அதற்காக சிலை அமைத்திருக்கிறேன். எங்களது பரம்பரையில் 3 தலைமுறைகளாக எவரும் நாய் இல்லாமல் இருந்தது கிடையாது. எனது தாத்தா, அப்பா, கொள்ளுத்தாத்தா என அனைவரும் நாயை பிரியமாக வளர்த்து வந்தனர். என்றார்.
முத்துவின் மகன் மனோஜ் கூறுகையில், 'டாம் நன்றாகத்தான் இருந்தது. திடீரென கடந்த ஆண்டு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. நல்ல சிகிச்சைகள் அளித்தோம். இருப்பினும், உடல் நல பாதிப்பால் கடந்த ஆண்டு ஜனவரியில், டாம் எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டது.
இதையும் படிங்க - மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய 10 அடி நீளமுள்ள மலைபாம்பு..
டாமுக்காக கோயில் கட்ட வேண்டும் என்று எனது அப்பா, தனது சொந்த சேமிப்பில் இருந்து ரூ. 80 ஆயிரத்தை அளித்தார். அதிலிருந்து மார்பிள் கல்லில் டாமின் சிலை செய்யப்பட்டு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. நல்ல நாட்கள் மற்றும் அனைத்து வெள்ளிக் கிழமைகளிலும் டாமின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறோம்' என்றார். பாசமுள்ள நாய்க்காக கட்டப்பட்ட கோயில் மானாமதுரை மக்களை ஈர்த்து வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.