• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிவகங்கையில் போடாத சாலைக்கு ரூ.14 லட்சம்: ஆர்டிஐயில் அதிர்ச்சித் தகவல்- நடவடிக்கை எடுக்குமா அரசு

சிவகங்கையில் போடாத சாலைக்கு ரூ.14 லட்சம்: ஆர்டிஐயில் அதிர்ச்சித் தகவல்- நடவடிக்கை எடுக்குமா அரசு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சிவகங்கையில் போடாத சாலைக்கு 14 லட்ச ரூபாய்க்கு செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டது ஆர்.டி.ஐயில் அம்பலமாகியுள்ளது.

  • Share this:
    சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே சேதமடைந்த சாலையில் பேவர் பிளாக் (paver block) பதித்ததாகக் கூறி 14 லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது. சாலை போடப்பட்டதாக ஆர்டிஐ மூலமாக தகவல் பெறப்பட்டுள்ள நிலையில், சாலை எங்கே என கேள்வி கேட்கின்றனர் பொதுமக்கள்.

    சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பணம் பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட திருத்தி பட்டி, புலவன்பட்டி, சூரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்த ஊராட்சிக்குட்பட்ட நடுவளவு தெருவில் அமைந்திருக்கும் முக்கிய சாலையை கிராம மக்கள் வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர். சாலையின் முக்கியத்துவம் கருதி 8 ஆண்டுகளுக்கு முன்பு சிமென்ட் சாலையாக மாற்றப்பட்டது.

    ஆனால் நீண்ட காலமாக பராமரிப்பு இல்லாததால் ஆங்காங்கே சாலை சேதமடைந்து காணப்பட்டது. இந்த சாலையை சீரமைத்துத் தருமாறு கிராமமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதிகாரிகள் செவிசாய்க்காததால் கிராம மக்கள் இணைந்து கல்லல் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் சாலையை சீரமைத்துத் தருமாறு மனு கொடுத்தனர்.

    அப்போது சாலையில் ஏற்கனவே பேவர் பிளாக் கற்கள் பதித்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது குறித்த தகவல்களை கேட்டுள்ளனர்.

    அதில், தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 14 லட்சம் ரூபாய் மதிப்பில் நடுவளவு தெருப்பகுதியில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு வேலை முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இதேபோல் 4 சாலைகள், 2 தடுப்பணைகள் அமைக்காமலேயே, அமைத்ததாக கூறி முறைகேடு நடந்திருப்பதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இந்த முறைகேடு குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதுகுறித்து கல்லல் ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ' பேவர் பிளாக் சாலை போடப்பட்டது குறித்து நேரடியாக சென்று விசாரிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

    போடாத சாலைக்கு 14 லட்சம் ரூபாய் மக்கள் பணம் செலவழிக்கப்பட்டது குறித்த பொதுமக்களின் கேள்விக்கு அதிகாரிகள் என்ன பதில் அளிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: