சிவகங்கையில் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க ஒரே நேரத்தில் குவிந்த மக்கள்: நோய்தொற்று பரவும் அபாயம்!

ரேஷன் கடையில் மக்கள் கூட்டம்

ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிச்செல்ல கடை முன்பு 200க்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

 • Share this:
  ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க ஒரே நேரத்தில் மக்கள் குவிந்ததால், நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  சிவகங்கை மாவட்டத்தில் 829 ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரத்திற்காக கடந்த 15ம் தேதி முதல் தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் இரண்டாயிரம் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கும் பணி நடைபெற்றதால் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டது.

  மேலும், அதிகரித்து வரும் தொற்று பரவலை கட்டுப்படுத்த தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், ரேஷன் கடைகள் திறப்பது குறித்து தெளிவான அறிவிப்பு இல்லாததால், நேற்று பல்வேறு பகுதிகளிலும் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு உடனே மூடப்பட்டது.

  இதையடுத்து, தமிழக அரசு இன்று முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண உதவி தொகை வழங்கலாம் என உத்தரவிட்டது.

  ரேஷன் கடையில் அதிகளவில் கூடிய மக்கள் கூட்டம்


  இந்நிலையில் காரைக்குடி ஆலங்குடி யார்வீதி ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிச்செல்ல கடை முன்பு 200க்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.  ரேஷன் கடை திறந்த உடன் பெண்கள் முண்டியடித்து கொண்டு முதலில் சில பேர் சென்றதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

  நோய் தொற்று பரவலை பற்றி கவலைப் படாமல் சமூக இடைவெளியின்றி கும்பலாக நின்று பொருட்கள் வாங்க நின்றவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் அறிவுரை கூறியும், அதனை யாரும் கேட்காததால் அவர்கள் சென்று விட்டனர். அரசின் தெளிவான அறிவிப்பு இல்லாததாலும் நாட்கள் குறைவாக இருப்பதால் தங்களுக்கு பொருட்கள் இல்லை என்று கூறிவிடுவார்கள் என எண்ணி ஒரே நேரத்தில் அதிகளவில் மக்கள் கூடியதால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

  செய்தியாளர் - முத்துராமலிங்கம்
  Published by:Esakki Raja
  First published: