இந்திய அரசு தவறான கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை நமக்கு வரக்கூடிய அபாயம் இருக்கிறது என்று இந்திய அரசை எச்சரிப்பதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைக்கு காரணம் நிர்வாக சீர்கேடு, தவறான பொருளாதார கொள்கையை பின்பற்றியதன் காரணமாக மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இலங்கை மூழ்கி இருக்கின்றது.
அதே தவறான கொள்கைகளின் சாயல் இந்திய அரசின் கொள்கைகளிலும் கண்கூடாக தெரிகின்றது. இவர்களால் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏராளமான கடன் வாங்குகிறார்கள். கடன் வாங்கி எதற்கு செலவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
பெட்ரோல், டீசல் மீது கடுமையான வரியை போட்டு இன்று சில்லறை பணவீக்கம் 7 சதவீதத்தை தாண்டி இருக்கின்றது. இந்த தவறான கொள்கைகளை தொடர்ந்து இந்திய அரசு பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை நமக்கு வரக்கூடிய அபாயம் இருக்கின்றது என்று எச்சரிக்கிறேன் என்று அவர் கூறினார்.
Read More : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டிய கனமழை - மின்னல் தாக்கி ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு
மேலும், ஒரு நாடு ஒரு மொழி என்பது மத்திய அரசு கடைசியாக எடுத்து இருக்கக்கூடிய அஸ்திரம். இதற்கு முன்பு ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு. ஒரு நாடு ஒரு பாடத்திட்டம், ஒரு நாடு ஒரு மதம், ஒரு நாடு ஒரு உணவு பழக்கம், ஒரு நாடு ஒரு உடை பழக்க வழக்கம், என்று பேசி தற்போது மக்களவை அவைத்தலைவர் ஒரு நாடு ஒரு சட்டப்பேரவை அமைப்பு என்று உருவாக்க முயற்சி மேற்கொள்கிறார். இது சமதர்ம நாடா இல்ல சர்வாதிகார நாடா? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
Must Read : 2700 கோடி செலவில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் திட்டம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!
உள்துறை அமைச்சர் கூறுகிறார் 70% மத்திய அரசின் குறிப்புகள், கோப்புகள், இந்தியில் வந்துள்ளதாக கூறுகிறார். இதை கடுமையாக எதிர்க்க வேண்டும். பாரதிய ஜனதாவின் நோக்கம் இறுதியாக ஒரு நாடு ஒரு கட்சி, ஒரு நாடு ஒரு தலைவர் என்று பல நாடுகள் போன பாதையில் பாரதிய ஜனதா கட்சி போய்க்கொண்டிருக்கிறது. சீனா, ரஷ்யா, துருக்கி, பர்மா இந்த நாடுகள் போகின்ற பாதையில் தான் இந்திய அரசும் போகிறது என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன் என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.