சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சார் இணைப்பதிவாளர் அலுவலகம் 1 மற்றும் 2 ஆகிய பத்திரப்பதிவு அலுவலகங்கள் முறையே முத்துப்பட்டினம் மற்றும் செஞ்சைபகுதியில் வாடகை கட்டிடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்நிலையில், தற்போது காரைக்குடி, ராமேஸ்வரம் சென்னை பைபாஸ் சாலையில் ரூ.2.16 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பத்திர பதிவு அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
காரைக்குயில் நடந்த நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் மற்றும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய கட்டிட அலுவலகத்தை திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் தான் முழு உரிமை இருக்க வேண்டும் என்று கூறினார்.
சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட துணைவேந்தர் நியமன புதிய சட்டமசோதாவை வரவேற்கிறேன். எல்லா நிலையிலும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒத்துப்போக வேண்டும் என்பதில் அவசியமில்லை என்றார். மேலும், சமீபகாலமாக தமிழ்நாட்டுக்கு நியமிக்கப்படுகிற ஆளுநர்கள் வரம்பு மீறி செயல்படுகிறார்கள், வரம்பு மீறி செயல்பட கூடாது என்பதற்காக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதுதான் ஜனநாயகத்திற்கு சிறந்தது என்றார்.
தொடர்ந்து பேசிய கார்த்தி சிதம்பரம், கல்வி என்பது மத்திய, மாநில அரசு பொதுப்பட்டியலில் இருக்க வேண்டும். மாநில அரசின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொள்ள வேண்டும். தன்னிச்சையாக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருந்ததால் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே தமிழக சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேருவாரா? என்பது முக்கியம் கிடையாது என்றும், கட்சியில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். கடந்த 2 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. எனவே, கட்சி செயல்பாட்டில் மாற்றம் வர வேண்டும் என கடந்த 2020-ல் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
Must Read : பிரேக் என நினைத்து ஆக்சிலேட்டரை அழுத்திய ஓட்டுனர் - சென்னை பீச் ஸ்டேஷன் ரயில் விபத்து விசாரணையில் திடுக்கிடும் தகவல்
எனவே, பிரசாந்த் கிஷோர் மற்றும் மற்றவர்கள் கூறும் யோசனைகளை காங்கிரஸ் கட்சி அமல்படுத்த வேண்டும் அப்போதுதான் கட்சியில் மாற்றம் வரும் என்று கூறினார்.
செய்தியாளர் - முத்துராமலிங்கம், காரைக்குடி. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.