முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது வருந்தத்தக்கது - ப.சிதம்பரம்

தமிழகத்தில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது வருந்தத்தக்கது - ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது வருந்தத்தக்கது என்றும் அவர்களுக்கு வாக்களித்த மக்கள் இதனை விரைவில் உணர்வார்கள் என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கவுள்ளது.  இந்நிலையில், காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்திடம் தேர்தல் முடிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ப.சிதம்பரம்,  ‘தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு நன்றி. திமுக தலைவர் ஸ்டாலின் பெருமுயற்சியாலும்  உழைப்பாலும் இந்த வெற்றி கிடைத்துள்ளது’ என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் அதிகாரம், பணபலம் ,உக்கிரப்போர், நிலை பிறழ்ந்த தேர்தல் கமிஷன் போன்ற  நடவடிக்கைகளில் தன்னந்தனியாக போராடி வெற்றி பெற்ற மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் பாஜக நச்சு  கொள்கையை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையை  மேற்கு வங்க தேர்தல் ஏற்படுத்தியுள்ளதாகவும் ப.சிதம்பரம் குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி  அக்கட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பு என்றும் , தற்போது வெற்றி பெற்றுள்ளவர் மனதாலும், வெளித்தோற்றத்திலும் காங்கிரஸ்காரர் தான். சந்தர்ப்ப சூழலாக பாஜக பக்கம் சாய்ந்துள்ளதாக தெரிவித்தார்.

ஒற்றுமையுடன்  மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி  செயல்பட்டால்,  2024ம் ஆண்டு  மக்களவை தேர்தலில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றும் ப.சிதம்பரம் கூறினார்.

தற்போதைய தேர்தல் ஆணையம்  நிலைபிறழ்ந்த தேர்தல் ஆணையமாக உள்ளதாக விமர்சித்த ப.சிதம்பரம்,  இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும்  நல்ல அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் பொறூப்புகளுக்கு வரவேண்டும் என குறிப்பிட்டார்.

தமிழகத்தில் 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது வருந்ததக்கது என்றும்  இவர்களுக்கு வாக்களித்த மக்கள் விரைவில் உணர்வார்கள்  என்றும் தெரிவித்த ப.சிதம்பரம், தமிழகத்தில் பாஜக கால் ஊன்றக்கூடாது என்பதுதான் தங்களின் கொள்ளை என்றும் அமைய இருக்கின்ற அரசு திறமையாக செயல்பட நல் யோசனைகளையும்  முழு ஒத்துழைப்பையும் காங்கிரஸ் வழங்கும் என கூறினார்.

செய்தியாளர்: முத்துராமலிங்கம், காரைக்குடி

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: BJP, Congress, P.chidambaram, TN Assembly Election 2021