Home /News /tamil-nadu /

போலீஸ்காரர்களுக்கு காதல் வலை விரித்து பல லட்சங்களை சுருட்டிய பலே பெண்..

போலீஸ்காரர்களுக்கு காதல் வலை விரித்து பல லட்சங்களை சுருட்டிய பலே பெண்..

Youtube Video

மோசடி செய்த பணத்தில் பெண் ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவருடைய முகநூல் கணக்கில் சுமார் 200 காவல் துறையினர் நண்பர்களாக உள்ளனர்.

    ஃபேஸ்புக் பக்கத்தில் இளம் ஆண் காவலர்களை குறிவைத்து திருமண ஆசைக்காட்டி லட்சக்கணக்கில் பணமோசடி செய்த பெண் போலீசாரிடம் சிக்கியுள்ளார். மருத்துவம் படிப்பதாக பொய் கூறி மோசடிப் பெண் பல லட்சம் சுருட்டியது எப்படி என தெரிந்து கொள்வோம்.

    திரைப்படத்தில் வருவது போன்று ஒரு லேப்டாப்பை வைத்து பல இளம் காவலர்களை காதல் வலையில் வீழ்த்தி பல லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளார் இளம் பெண் ஒருவர். 200க்கும் மேற்பட்ட காவலர்கள் இவரது முகநூல் வலையில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. மோசடிப் பெண் சிக்கியது எப்படி?

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான பாரதி ராஜா. இவர் மணிமுத்தாறில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் சிறப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களாக சென்னை திருவொற்றியூரில் உள்ள கடலோர காவல் படையில் வேலை பார்த்து வருகிறார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி 27-ம் தேதி பாரதிராஜாவின் முகநூல் பக்கத்தில் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஐஸ்வர்யா என்பவர் பெண் நண்பராக அறிமுகமானார்.  நாளடைவில் இவர்களின் முகநூல் நட்பு காதலாக மலர்ந்துள்ளது

    தான் மருத்துவம் படிப்பதாக கூறிய அந்த பெண் அடிக்கடி செல்போன் மூலமாக பேசியும், முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் மூலமாக சாட் செய்தும் வந்துள்ளார். அந்த பெண் காவலர் பாரதிராஜாவை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இந்நிலையில், தன்னுடைய மருத்துவ படிப்பிற்கு பணம்  தேவைப்படுவதாக கூறி பாரதிராஜாவிடம் கேட்டுள்ளார். தனது தந்தை பழனியின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்துமாறு கூறி படிப்படியாக பாரதிராஜாவிடம் இருந்து 14 லட்சம் ரூபாயை ஏமாற்றி பெற்றிருக்கிறார்.

    இதற்கிடையே, பாரதிராஜாவின் உறவினரான மகேந்திரன் என்பவரிடம் முகநூல் பக்கத்தில் மற்றொரு பெண் போல் ஐஸ்வர்யா பழகியுள்ளார். பின்னர் மகேந்திரனை ஏமாற்றி, 20 லட்சம் ரூபாயை தந்தையின் வங்கி கணக்கு மூலம் ஐஸ்வர்யா பெற்றுள்ளார்.

    மேலும் , மகேந்திரன் மூலமாக ஒரு சவரன் தங்க நகை, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை ஏமாற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக பாரதிராஜா, மகேந்திரன் ஆகிய இருவரிடமும் பேசுவதை ஐஸ்வர்யா நிறுத்திவிட்டார் .

    ஐஸ்வர்யா குறித்து விசாரித்த போதுதான் தெரிந்தது. பெண் ஒருவர் தங்களை ஏமாற்றி பணம் பறித்தது. சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பாரதிராஜா புகார் அளித்தார்.  இப்புகாரின் பேரில் ஆவடி காவல் துணை ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    ஐஸ்வர்யாவின் செல்போன் எண்களைக் கொண்டு அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார், ஐஸ்வர்யா மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோரை கைது செய்தனர்.  விசாரணையில் ஐஸ்வர்யா ஆவடி வீட்டு வசதி வாரிய பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஒரு செல்போன் மற்றும் லேப்டாப்பை வைத்து கொண்டு தான் பங்கு சந்தையில் முதலீடு செய்து அதன் மூலம் பணியாற்றி வருவதாக தாய் தந்தையிடம் பொய் கூறியுள்ளார்.

    முகநூலில் ஆண் நண்பர்களிடம் தொடர்ந்து பண வசூல் வேட்டையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    அவரது முகநூல் பக்கத்தை ஆராய்ந்ததில், இளம் காவலர்களை மட்டுமே நண்பர்களாக்கி அவர்களிடம் தான் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

    பாரதிராஜா மற்றும் மகேந்திரனிடம் மோசடி செய்த 34 லட்ச ரூபாய் பணத்தில் அந்த பெண் ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

    அவருடைய முகநூல் கணக்கில் சுமார் 200 காவல் துறையினர் நண்பர்களாக உள்ள நிலையில் யார் யாரிடம் மோசடி செய்துள்ளார் என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    இளம் ஆண் காவலர்களை குறி வைத்து, இளம் பெண் ஒருவர் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     
    Published by:Arun
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Sivagangai

    அடுத்த செய்தி