ஒரே வீடு... நடுவில் நீண்ட தடுப்புச் சுவர்... கொலையில் முடிந்த அண்ணன் தம்பி தீராப்பகை...விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

Youtube Video

காரைக்குடியில் சந்தேகம் மரணம் என விசாரித்த வழக்கில், சொத்துத் தகராறில் தம்பியே அண்ணனை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

 • Share this:
  சேலம் மாவட்டத்தில் நிலப் பிரச்னை காரணமாக, உடன் பிறந்த அண்ணனே எப்.எம் ரேடியோவில் வெடிகுண்டு வைத்து கொலை செய்த கொடூரத்தின் ஈரம் இன்னும் காயாத நிலையில், சொத்துப்பிரச்னையில் காரைக்குடியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கீழபூங்குடியை சேர்ந்தவர்கள் 60 வயதான நல்லதம்பி மற்றும் 50 வயதான பூமிநாதன். கடந்த சனிக்கிழமை பூர்வீக வீட்டின் ஓடு பிரிக்கும் பணி நடந்த போது, அண்ணன் நல்லதம்பி மயங்கி விழுந்துள்ளார்.

  உறவினர்கள் அவரை, செம்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தூக்கிச் சென்று சோதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

  தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உடல் சிவகங்கை அரசு மருத்துவமனக்கு அனுப்பப்பட்டது. தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நல்லதம்பியின் மகன் கொடுத்த புகாரின் பேரில், சந்தேக மரணம் என கல்லல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

  உடற்கூறு ஆய்வின் முதற்கட்ட அறிக்கையில், ஆணுறுப்பில் அடிபட்டதால், உயிரிழந்தது தெரிய வந்தது. இதை அடுத்து சந்தேகத்தின் பேரில் நல்லதம்பியின் சகோதரர் பூமிநாதனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

  அண்ணன், தம்பியான நல்லதம்பியும், பூமிநாதனும் வசதி படைத்தவர்கள். ஒரே மாதிரி வீடு கட்டி நடுவில் தடுப்புச் சுவர் அமைத்து வாழ்ந்து வந்தனர். சேரன் பாண்டியன் திரைப்படத்தில் வருவதுபோல், 25 ஆண்டுகளாக இருவரும் பேசிக் கொள்ளாமல் இருக்கும் அளவுக்கு பகை இருந்து வந்தது.

  இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சொத்து பிரச்னை ஏற்பட்டடு ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பாகப் பிரிவினை நடந்தது. இதில் அண்ணன் நல்லதம்பி பூர்வீக வீட்டில், புதிதாக கட்டிய ஒரு பகுதி அவரது தம்பி பூமிநாதனுக்கு சென்றது.

  அதற்கு 40 ஆயிரம் ரூபாயை பூமிநாதன், நல்லதம்பிக்கு தர வேண்டும் என பேசி முடிக்கப்பட்டது. அந்த பணத்தை தரவில்லை என்றால், அந்த வீட்டில் உள்ள ஓடு, மரங்களை நல்லதம்பி எடுத்து கொள்ளலாம் என பேசி முடிக்கப்பட்டுள்ளது.

  பஞ்சாயத்தில் பேசியபடி 40 ஆயிரம் ரூபாய் பணத்தை தம்பியான பூமிநாதன் தரவில்லை என கூறப்படுகிறது. அதனால் கடந்த சனிக்கிழமை நல்லதம்பி ஆட்களை அழைத்துச் சென்று ஓடுகளை பிரித்து எடுத்துள்ளார்.

  அப்போது ஓடுகளை பிரிக்க பூமிநாதன் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அது இருவருக்கும் இடையே கைலப்பாக மாறியுள்ளது. அப்போது நல்லதம்பியை, பூமிநாதன் எட்டி உதைத்துள்ளார். இதில் ஆணுறுப்பில் மிதிபட்டதில் அங்கேயே நல்லதம்பி மயங்கி கீழே விழுந்துள்ளார்.  பூமிநாதன் ஓடு பிரிக்க அழைத்துச் சென்ற ஆட்கள் மூலம், நல்லதம்பி மயங்கி விழுந்துவிட்டதாக நம்ப வைத்துள்ளார். உறவினர்களும் மயங்கி விழுந்ததாக கருதி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது உயிரிழந்தது தெரிய வந்தது.

  இதை அடுத்து சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய கல்லல் போலீசார் பூமிநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: