ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு குருவிகள் கூடு கட்டி வாழ்ந்து வந்த நிலையில், தற்போது நகர மயமாக்கம் காரணமாக அவைகள் வேகமாக அழிந்து வருகின்றன. வாகன இரைச்சல், செல்போன் கோபுரத்தில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர்கள் உள்ளிட்டவைகளால் குருவிகள் அழிந்து வருகின்றன. இதனை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அடுத்த பொத்தகுடி கிராமத்தில் உள்ள சுவிட்ச் பெட்டிக்குள் கடந்த ஒரு மாதம் முன்பு குருவி கூடு கட்டி முட்டையிட்டு இருந்தன. இதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் அதற்கு தொந்தரவு கொடுக்காமல் பாதுகாக்க விரும்பினர். அந்த சுவிட்ச் பெட்டியில்தான் ஊருக்கு மின்சாரம் வழங்கும் மொத்த கண்ட்ரோல் இருந்தது. எனினும் குருவிகளை பாதுகாக்க விரும்பிய இளைஞர்கள், இது குறித்து வாட்ஸ் அப் மூலம் பொதுமக்களுக்கு தகவல் அளித்தனர்.
இதற்கு ஒத்துழைப்பு அளித்த அப்பகுதி மக்கள் ஸ்விட்சை ஆன் செய்யாமல் கடந்த ஒருமாதமாக மின்சாரம் இல்லாமல் இருளில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது அந்த குருவி அடைகாத்த முட்டைகளை பொரித்து, 2 குஞ்சுகள் வந்துள்ளன.
மேலும் இந்த குஞ்சுகள் பறக்கும் வரை கூட்டை பராமரிப்போம் எனவும் அதற்காக எத்தனை நாட்கள் ஆனாலும், மின்சாரமின்றி இருக்க நாங்கள் தயாராக உள்ளோம் எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். பொத்தகுடி கிராம மக்களின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.