புழல் ஏரியில் தொழில் மண்டலம் அமைக்க சிட்கோ முடிவு... ஏரிக்கு தண்ணீர் வருவது பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு...!
புழல் ஏரியில் தொழில் மண்டலம் அமைக்க சிட்கோ முடிவு... ஏரிக்கு தண்ணீர் வருவது பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு...!
புழல் ஏரி
நீர்நிலைகளை வேறு பயன்பாட்டிற்கு ஒதுக்க அரசுக்கு அதிகாரம் கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழும் புழல் ஏரியில் தொழில் மண்டலம் அமைப்பதற்காக 53 ஏக்கர் நிலப்பரப்பை தமிழ்நாடு சிறு தொழில்கள் வளர்ச்சிக் கழகத்திற்கு ஒதுக்குவதை கைவிட வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையின் குடிநீர் ஆதாரங்களான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட நீர் நிலைகள் முற்றிலும் வறண்டு விட்டதால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிக்கு ஆளாகினர்.
இந்நிலையில் 4, 500 ஏக்கர் பரப்பளவிலான புழல் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் தொழில் மண்டலம் அமைப்பதற்காக தமிழ்நாடு சிறு தொழில்கள் வளர்ச்சி கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 53.67 ஏக்கர் நிலத்தை வழங்கும்படி அந்த கழகம் சார்பில் கடந்த 3-ம் தேதி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழும விதிகளின்படி 21 நாட்களுக்குள் நிலம் கையகப்படுத்துவதற்காக ஆட்சேபனைகளை தெரிவிக்க வேண்டும் என்ற நிலையில், இதுவரை யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளை வேறு பயன்பாட்டிற்காக மாற்றக் கூடாது என ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள கடிதங்களுக்கு பெருநகர வளர்ச்சி குழுமம் சரியாக பதிலளிக்கவில்லை என்று அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் கூறியுள்ளார்.
நிலம் கையகப்படுத்துவது தொடர்பான கருத்து கேட்பு குறித்த தகவல் முறையாக பொதுமக்களிடம் சென்றடையவில்லை என்றும் தன்னார்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை மாநகரின் குடிநீர் தேவையில் பெருமளவு பூர்த்தி செய்யும் புழல் ஏரிக்கு ஏற்கனவே நீர் வரத்து குறைந்து காணப்படும் சூழலில், ஏரிக்கு நீர் வரும் பாதையை வேறுபயன்பாட்டிற்கு வழங்கிவிட்டால் தண்ணீர் முழுமையாக வந்து சேராது என்று ஓய்வுபெற்ற பொதுபணித்துறை அதிகாரி வீரப்பன் கவலை தெரிவித்துள்ளார்.
நீர்நிலைகளை வேறு பயன்பாட்டிற்கு ஒதுக்க அரசுக்கு அதிகாரம் கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், புழல் ஏரி நீர் பிடிப்பு பகுதியில் தொழில் மண்டலம் அமைக்க ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், எந்தவித ஆட்சேபனையும் வரவில்லை என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்திருப்பது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலூம் பார்க்க... மழை நீர் சேமிப்பு தொட்டிகளை முறையாக அமையுங்கள்: இயக்குனர் அமீர்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.