மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மாதானம் திட்டம் என்ற பெயரில் 20க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கப்படுகின்றன. இங்கு எடுக்கப்படும் திரவக நிலையிலான எரிவாயுவை வர்த்தக நிறுவனங்களுக்குக் கொண்டு செல்ல, சீர்காழியை அடுத்துள்ள வேட்டங்குடி, எடமணல், திருநகரி மற்றும் மேமாத்தூர் வரையான சுமார் 32 கிலோமீட்டர் தொலைவுக்கு விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைப்பதற்கான பணிகளை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கெயில் நிறுவனம் தொடங்கியது.
இதற்காக 1.5 மீட்டர் ஆழத்திற்கு பூமிக்குள் குழாய்கள் புதைக்கப்பட்டன. இத்திட்டத்திற்கு தி.மு.க மற்றும் தோழமைக் கட்சிகள், விவசாயிகள், மீனவர்கள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்களும் தங்களது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி குழாய் பதிக்கும் பணிகளுக்கு எதிராக போராடியதால், பொதுமக்களின் கருத்து கேட்ட பிறகே குழாய் பதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக முதல்வர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இப்பகுதிகளில் விவசாயப் பணிகளை பாதிக்கும் திட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாது என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது கெயில் குழாய் புதைக்கும் பணியானது புதிய வழித்தடமாக சீர்காழி அருகேயுள்ள திருநகரியிலிருந்து வழுதலைக்குடி, வெள்ளக்குளம், கேவரோடை வழியாக பழைய பாளையம் முதன்மை எரிவாயு சேகரிப்பு மையம் வரை இரவோடு இரவாக நடந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட மண்டலம் என்ற அறிவிப்பு என்னவாயிற்று எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், இது போன்ற பெரும் திட்டங்களைச் செயலாக்கும்போது அந்தந்தப் பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்பது அவசியம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை மத்திய, மாநில அரசுகள் கவனிக்க வேண்டும். ஏற்கனவே வறட்சி, மழை, வெள்ளம், கடன்சுமை போன்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் நிலையில், இப்படியான பேரழிவுத் திட்டங்களினால் விவசாய வாழ்வாதாரம் பாழாகிவிடும் என்று விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
மத்திய, மாநில அரசுகள் இதனை முற்றிலும் தடை செய்ய வேண்டுமெனவும், காலம்காலமாக பயன்பாட்டிலுள்ள விவசாய நிலங்களை அழித்து சில ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்படக்கூடிய கெயில், சாகர்மாலா போன்ற திட்டங்களைக் கொண்டுவருவது கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு சமம் என்று அவர்கள் தெரிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.