மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, தாய், மகன் என இரண்டு பேரைக் கொடூரமாக கொலை செய்து கொள்ளைசம்பவம் அரங்கேற்றிய ராஜஸ்தான் கொள்ளையர்கள் அமேசான் ஆப் மூலமாக பொம்மை துப்பாக்கி வாங்கி கொள்ளையை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீமாககக் கொண்டவர்கள் தன்ராஜ் சவுத்ரி - ஆஷா தம்பதி; இவர்களின் ஒரே மகன் அகில்; அகிலின் மனைவி நேகல். இவர்கள் அனைவரும் சீர்காழி ரயில்வே சாலையில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். சீர்காழி - பூம்புகார் சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தர்மகுளம் என்ற இடத்தில், தன்ராஜ் நகை அடகு மற்றும் தங்க நகைகள் மொத்த விற்பனைக் கடை நடத்தி வருகிறார்.
தன்ராஜ் சமீபத்தில் தனது வீட்டை முற்றிலும் புதுப்பித்து மாற்றி அமைத்துக் கட்டியுள்ளார். பலகோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பதால் பாதுகாப்பிற்காக, பயோமெட்ரிக் பூட்டு வசதி கொண்ட கதவு, வீடு முழுவதும் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி ஆகியவற்றைப் பொருத்தியுள்ளார். வீட்டு உறுப்பினர்களின் கை ரேகையை இயந்திரத்தி்ல் பதிந்தால்தான் கதவு திறக்கும்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை 6 மணியளவில், வீட்டின் முன்பு கார் ஒன்று வந்து நின்றுள்ளது காரில் ஓட்டுநர் அமர்ந்திருக்க, 3 பேர் இறங்கி கதவின் அழைப்பு மணியை அழுத்தியுள்ளனர். சத்தம் கேட்ட தன்ராஜின் மருமகள் நேகல், தனது விரல் ரேகையை வைத்துக் கதவைத் திறந்துள்ளார். வாசலில் நின்றிருந்த 3 பேரில் ஒருவர், நேகலின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டி உள்ளே தள்ளிச் சென்றார்; அவர் பின்னாலேயே மற்ற இருவரும் உள்ளே நுழைந்தனர்
நேகலின் சத்தம் கேட்ட மாமனார் தன்ராஜ் எழுந்து ஓடி வந்து பார்த்து அதிர்ச்சியடைந்து கத்தியுள்ளார். அதற்குள் மாமனார் மற்றும் மருமகளை கத்தியால் தாக்கிய கும்பல், இருவரது கைகளையும் இரும்புக் கட்டுக் கம்பியால் கட்டிப் போட்டுள்ளனர். அவர்களின் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த தாய் ஆஷா மற்றும் மகன் அகில் இருவரும் சத்தம் போட்டுக் கத்தியுள்ளனர். கொள்ளையர்களின் எச்சரிக்கையையும் மீறி அவர்கள் கத்தவே ஆத்திரமடைந்த கும்பல், இருவரின் கழுத்தையும் கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளனர்.
ஆஷாவின் சடலத்தை ஹாலில் இருந்து இழுத்துச் சென்று சமையலறையில் தள்ளியுள்ளனர். தங்கள் கண் முன்னால் நடந்த இரட்டைக் கொலைகளைப் பார்த்த தன்ராஜும், நேகலும் அதிர்ச்சியில் உறைந்து போய் தங்களை விட்டுவிடும்படி கதறியுள்ளனர். தன்ராஜை துப்பாக்கி முனையில் வீட்டிற்குள் அழைத்துச் சென்ற கொள்ளையர்கள், அவர் சொன்னபடி, கட்டிலில் உள்ள ரகசிய அறையில் ஒரு பையில் இருந்த 17 கிலோ நகைகளையும், ஆறரை லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் எடுத்து ஒரே பையில் போட்டுக் கொண்டனர்.
அதேநேரம் அலறல் சத்தம் மற்றும் கொலை செய்யும் சத்தம் வெளியில் கேட்டதால், வெளியில் காரில் காத்திருந்த ஓட்டுநர் காருடன் தப்பியோடி விட்டார். அதைப் பார்த்த 3 பேரும், பதற்றமடைந்து தன்ராஜை மிரட்டி அவரது கார் சாவியைப் பறித்துக் கொண்டு காரில் ஏறித் தப்பிச் சென்றனர். நேகலின் கையை கொள்ளையர்கள் சரியாகக் கட்டாததால், அவர் உடனடியாக கைக் கட்டுகளை அவிழ்த்து மாமனாரை மீட்டார். அதன்பின் உறவினர்கள், போலீசாருக்கு அவர்கள் தகவல் அளித்துள்ளனர்; இரட்டைக் கொலை மற்றும் நகைகள் கொள்ளைச் சம்பவம் இதற்குள் சுற்றுவட்டாரங்களில் தீயாகப் பரவியது. தகவல் அறிந்த சீர்காழி போலீசார், மாவட்ட எல்லைகளை உஷார்படுத்தினர்.
இதற்கிடையே காரில் ஜிபிஎஸ் கருவி இருப்பதை அறிந்த கொள்ளையர்கள், சீர்காழியில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எருக்கூர் மேலத்தெரு ஓலையம்புத்தூர் கிராமத்தின் சாலையில் காலை 9 மணிக்கு காரை விட்டு விட்டு வயல் வரப்பு வழியாக நகைப் பையுடன் தப்பியோடியுள்ளனர் ஏற்கனவே தகவல் அறிந்த பொதுமக்கள் அவர்களைப் பார்த்ததும் சந்தேகமடைந்து பிடிக்க முயன்றபோது துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர். அரைமணிநேரப் போராட்டத்திற்குப் பின் பொதுமக்கள் ஒருவரைப் பிடித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையிலான போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர்; விசாரணையில் அவர் பெயர் மணீஷ் என்பது தெரியவந்தது. எஸ்பி வாகன ஓட்டுநரும் காவலருமான சுரேஷ், மற்ற இரண்டு பேர் நின்றிருந்த இடம் அருகே சென்று நைசாகப் பேசி அவர்களைப் பிடித்தார்; விசாரணையில் அவர்கள், மணிப்பால் சிங், ரமேஷ் என்பது தெரியவந்தது.
இவர்களில் மணிப்பால் சிங்கை அழைத்துக் கொண்டு நகைப் பை பதுக்கப்பட்ட சவுக்குத் தோப்பிற்கு போலீசார் சென்றுள்ளனர். நகைப் பையையும் பணப் பையையும் எடுத்துக் கொடுப்பது போல் குனிந்த மணிப்பால் சிங் பையைத் திறந்து அதில் இருந்த கத்தியை எடுத்து போலீசாரை தாக்கி தப்பமுயன்றுள்ளார்; அதில் காவலர் ஒருவர் காயமடைந்தார். அதிர்ச்சியடைந்த போலீசார் பாதுகாப்பிற்காக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மணிப்பால் சிங் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
இதையடுத்து கிராம மக்கள் உதவியுடன் மணிப்பால் சிங் சடலத்தை மீட்ட போலீசார் அதை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கொள்ளையர்களை தன்ராஜ் வீட்டிற்கு காரில் அழைத்து வந்ததாகக் கூறப்பட்ட கருணாராம் என்பவர், கும்பகோணத்தில் கைது செய்யப்பட்டார். கைதானவர்களிடம் இருந்து 17 கிலோ நகைகள், 2 துப்பாக்கிகள், கத்தி, தன்ராஜின் கார் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர் கைதான 3 பேரிடமும் சீர்காழி காவல்நிலையத்தில் வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.