ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜவுளிக்கடை பிளாஸ்டிக் பைகளுக்கு அபராதம்.. பிளாஸ்டிக் பை உற்பத்தியாளர்கள் வேதனை

ஜவுளிக்கடை பிளாஸ்டிக் பைகளுக்கு அபராதம்.. பிளாஸ்டிக் பை உற்பத்தியாளர்கள் வேதனை

பிளாஸ்டிக்

பிளாஸ்டிக்

அரசு தடை விதித்துள்ள 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தாங்கள் உற்பத்தி செய்யவில்லை என்றும், மஞ்சள் பை திட்டத்தை வரவேற்பதாகவும், பிளாஸ்டிக் பை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மத்திய அரசின் தடை பட்டியலில் இல்லாத போதும் ஜவுளிக்கடைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதிப்பதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிளாஸ்டிக் பை உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சுகாதார சீர்கேடுகளில் இருந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், கேரி பேக் உள்ளிட்ட 14 வகையான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, கடந்த 2019-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை, இறக்குமதி ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், இந்த உத்தரவு இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

அதேநேரம், 75 மைக்ரானுக்கு அதிகமுள்ள பிளாஸ்டிக் பைகளை வரும் டிசம்பர் 30-ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், டிசம்பர் 31ம் தேதி முதல் 120 மைக்ரான் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவித்தது.

மேலும் படிங்க: இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எப்போது குறையும்? ஆய்வு தகவல்கள் வெளியீடு

இந்நிலையில், தமிழ்நாட்டில் மஞ்சள் பை திட்டத்தை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஜவுளிக்கடைகளுக்கு செல்லும் அதிகாரிகள் அங்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு அபராதம் விதிப்பதாக கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு பிளாஸ்டிக் பை ஆர்டர் வருவதில்லை என்றும், ஏராளமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் ஈரோட்டைச் சேர்ந்த பிளாஸ்டிக் பை உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அரசு தடை விதித்துள்ள 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தாங்கள் உற்பத்தி செய்யவில்லை என்றும், மஞ்சள் பை திட்டத்தை வரவேற்பதாகவும், பிளாஸ்டிக் பை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது ஆர்டர்கள் வராததால், வங்கிக் கடனை செலுத்த முடியாமல் தவிப்பதாகவும் கூறுகின்றனர்.

தடை விதிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எவை என்பதை அவற்றின் படத்தை குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசு தெளிவு படுத்த வேண்டும் என, பிளாஸ்டிக் பை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்க வேண்டும் என்ற பொதுவான உத்தரவே வந்துள்ளதாக குறிப்பிட்டனர்.

Also read: கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும்.. ஊரடங்கு தேவை இல்லை: WHO தலைமை விஞ்ஞானி

First published:

Tags: Plastic Ban