தமிழகத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதா, யுனானி யோகா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய துறைகளுக்கு என தனி பல்கலைக்கழகம் தொடங்குவது தொடர்பான சட்டமுன்வடிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, மாநிலத்தின் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையைப் போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழகத்தில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பல்கலைக்கழகத்தை சென்னைக்கு அருகே தொடங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு இயல், இசை, கவின் கலை பல்கலைக்கழத்தை தவிர, பிற அனைத்து அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் தற்போது இருந்துவரும் நிலையில், புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்று அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அனைத்திற்கும் முதலமைச்சர் தலைமை வகித்து பட்டங்கள், பட்டயங்கள் அல்லது பிற கல்வி சிறப்பு பட்டங்கள் அனைத்தையும் வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பபட்டது.
Must Read : ‘மாமா’ என்ற அபயக்குரல்.. 10 ஆண்டு பகை மறந்து ஓடோடி வந்து உயிரிழந்த உறவு - தஞ்சை களிமேட்டில் துயரம்!
அத்துடன், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.