காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் புகார்... எஸ்.ஐ சஸ்பெண்ட்

நாகை மாவட்டத்தில் தன்னை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் கொடுத்த புகாரில் 18 மாதத்திற்கு பிறகு எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
அதிகபட்சம் என்ன செய்ய முடியும் என காதலித்த பெண்ணிடம் மிரட்டல் தொணியில் பேசிய எஸ்.ஐ விவேக் ரவிராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் நாகை மாவட்டம் திட்டச்சேரியில் அப்போது உதவி ஆய்வாளராக பணிபுரிந்த தலைஞாயிறு ஓரடியம்புலத்தைச் சேர்ந்த விவேக் ரவிராஜ் என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

முகநூலில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்தில் சிக்கல் இருக்காது என்று நினைத்த அந்த பெண், காவல் உதவி ஆய்வாளருடன் நெருங்கி பழகினார். அதனால் கருவுற்றார். விவேக் ரவிராஜின் காதல் விவகாரம் அவர்களது வீட்டிற்கு தெரிய வந்தது. அவரது அக்கா மகளை திருமணம் செய்து வைக்க வீட்டில் முடிவு செய்தனர். விவேக் ரவிராஜூம் அதற்கு சம்மதித்ததாக கூறப்படுகிறது.


தான் கருவுற்ற விசயத்தை விவேக் ரவிராஜிடம் அந்த இளம் பெண் கூற அவர் திடுக்கிட்டுள்ளார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த விவேக் ரவிராஜ், ஓராண்டு கழித்து திருமணம் செய்துகொள்ளலாம் எனக்கூறி, நைசாக பேசி கருவை கலைக்க வற்புறுத்தி உள்ளார். காதலரின் பேச்சை நம்பிய அந்த பெண்ணும் கருவை கலைக்க சம்மதித்துள்ளார். இதை அடுத்து சென்னையில் உள்ள தனது நண்பர்கள் ஹரி, பிரேம் மூலம் தனியார் மருத்துவமனையில் வைத்து கருக்கலைக்கப்பட்டுள்ளது.

பின்னர், அந்த பெண்ணிடம் பேசுவதை விவேக் ரவிராஜ் தவிர்த்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியும், கெஞ்சியும் உள்ளார். காதலியின் கெஞ்சலுக்கு கொஞ்சமும் இரக்கம் காட்டாத அந்த காவல் உதவி ஆய்வாளர், திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.இதனால் காதலித்து கர்ப்பமாக்கி, கருவை கலைத்து ஏமாற்றிய காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அடுக்கடுக்கான ஆதாரங்களுடன், உள்ளூர் காவல்நிலையம், நாகை எஸ்.பி அலுவலகம், சென்னை காவல் ஆணையர் அலுவலகம், டிஜிபி அலுவலகம், நீதிமன்றம் என அலைந்து வந்தார்.

சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து தனக்கும் நீதி வேண்டும் எனக்கேட்டு ஒரு வீடியோவையும் வெளியிட்டார். நாகை எஸ்பி செல்வநாகரத்தினம் விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ விவேக் ரவிராஜ் மற்றும் அவரது தாய்க்கு எதிராக இளம் பெண் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு குரல் வலுத்தது.


இதை அடுத்து நாகை மாவட்டம் வலிவலம் காவல் நிலையத்தில் தற்போது பணியாற்றி வந்த எஸ்.ஐ. விவேக் ரவிராஜை பணியிடை நீக்கம் செய்து ஐஜி ரூபேஷ்குமார்மீனா உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக தான் கைது செய்யப்படலாம் என்பதால் விவேக் ரவிராஜ் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
First published: September 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading