சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பள்ளி நிர்வாகம்

சிவசங்கர் பாபா

சிவசங்கர் பாபாவின் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளநிலையில் குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்க மறுத்துவருகிறது.

 • Share this:
  பிரபல சாமியார் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் தொடர்பாக விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும், சிவ சங்கர் பாபா தரப்பும் முறையாக ஒத்துழைக்காமல் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.

  கூளிங்கிளாஸ், பேன்ட், சர்ட் , உயரக சொகுசு கார்கள் ,கண்ணாடி மாளிகை வீடு என்று மற்ற சாமியார்களை விட ஹய்கிளாஸ் மனிதனாக காட்டி கொள்பவர் சிவசங்கர் பாபா. தன்னை கடவுளாக அறிவித்துக்கொண்டவர் . கடந்த 15 ஆண்டுகளாக தான் நடத்தி வரும் பள்ளியில் மாணவிகளிடம் இவர் செய்த செயல்கள் தற்போது அம்பல் ஏறியுள்ளது.

  செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் சாத்தங்குப்பம் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளாக சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகின்றது. இந்தப் பள்ளியின் நிறுவனர் தான் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா.

  திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த இவர் 30 வருடங்களுக்கு முன்பு பிழைப்புதேடி சென்னை வந்தார். காவி உடை அணிந்து பூஜைகள் செய்து வந்த நிலையில், சிவசங்கர் பாபா என தனது பெயரை மாற்றி வைத்துக் கொண்டு ஆன்மீக உரையாற்ற ஆரம்பித்தார். தனியார் தொலைக்காட்சிகளில் ஆன்மிக சொற்பொழிவின் மூலம் பிரபலமானார்.

  நாளுக்கு நாள் இவரை தேடிவரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், அரசியல் செல்வாக்கும், பணபலமும் சேர்ந்தே தேடிவந்துள்ளது சிவசங்கர் பாபாவை.

  கேளம்பாக்கம் அருகே சுஷில் என்ற பக்தர் வழங்கிய நிலத்தில், ராமராஜ்ஜியம் என்ற பெயரில் தனக்கான ஆடம்பர நகரையே உருவாக்கினார். 64 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் தனக்கான அந்தரங்க ஆடம்பரமான கண்ணாடி மாளிகை, 300 குடும்பங்கள் தங்கும் அளவிற்கு வசதிகள், அத்துடன் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் என்ற ஆசிரம பள்ளியை நிறுவி தனது சாம்ராஜ்யத்தை நிறுவினார்.

  தனது பிரம்மாண்ட சாம்ராஜ்யத்திற்கு ராமராஜ்யம் என்று பெயரிட்டுள்ளார். தன்னை கிருஷ்ணரின் அவதாரமாக காட்டிக்கொள்ளும் சிவசங்கர்பாபா தனது பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் போது ஆனந்த நடனம் ஆடுவது மிக பிரபலம்.

  இதை பார்க்கும் பக்தர்கள் கடவுளே நம்முன் ஆடுகின்றாறே என்று ஆனந்த பரவசம் அடைவர். இவரது பக்தர்களில் பலர் தங்களது பிள்ளைகளை ஆசிரம பள்ளியிலையே சேர்த்து படிக்க வைத்துள்ளனர்.

  இந்நிலையில் தான் சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் செய்த பாலியல் அத்துமீறல்கள் வெளிவந்தன.

  அதை தொடர்ந்து சுஷில்ஹரி பள்ளியில் மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா கொடுத்த பாலியல் அத்து மீறல்களும் வெளிவர தொடங்கியன. சுஷில் ஹரி ஆசிரம பள்ளியில் படித்த சில முன்னாள் மாணவிகள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை தற்போது பகிர்ந்துள்ளனர்.

  பள்ளியில் படிக்கும் மாணவிகள் தேர்வுக்கு முன்பும் பிற ஆன்மிக நிகழ்வு நாட்களிலும் சிவசங்கர் பாபாவை கண்டிப்பாக சந்தித்து ஆசிர்வாதம் பெற வேண்டும். அப்போது தான் மாணவிகளுக்கு அந்த கொடுமைகள் நடந்துள்ளது.

  ஆசிர்வாதம் என்ற பெயரில் மாணவிகளை தனிதனியாக தனது அந்தரங்க அறையில் முறைமுகமாக சந்திக்கும் சிவசங்கர்பாபா மாணவிகளின் உடல்பாகங்களை அருவருக்கதக்க வகையில் தொட்டு தனது பாலியல் வக்கிரங்களை செயல்படுத்துவார் என்று குறுகின்றனர் முன்னாள் மாணவிகள்.

  அத்துடன் தனது அறையில் வெளிநாட்டு வகை உயர்ரக சாக்லேட்டுகளை அடுக்கி வைத்திருக்கும் சிவசங்கர்பாபா, பள்ளி மாணவிகளுக்கு அதைக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

  தனது லீலைகளை அரங்கேற்றிய பிறகு அதை மறைப்பதற்காக இந்த சாக்லேட்களைக் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் என்று கூறுகின்றனர் முன்னாள் மாணவிகள்.

  முன்னாள் மாணவிகளின் தொடர் புகார்களை தொடர்ந்து மாநில குழந்தைகள் நல உரிமைகள் ஆனையம் தனது விசாரணையை தொடங்கியது. முதற்கட்டமாக, கடந்த ஜூன் 1-ஆம் தேதி தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவர் சரஸ்வதி ரங்கசாமி பள்ளியில் நேரடியாக விசாரணை நடத்தினார்.

  அடுத்தநாள் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் கௌரி அசோகன் நான்குபேர் கொண்ட குழுவுடன் விசாரணை நடத்தினார். பள்ளியில் நேரடியாக நடத்திய விசாரணையில் பள்ளி நிர்வாகம் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் நடந்து கொண்டுள்ளது.

  அத்துடன் ஐந்து மாணவிகள் ஆணைய அதிகாரிகளிடம் ரகசியமாக சில வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிகின்றது. அதன் அடிப்படையில் சிவசங்கர் பாபா, பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட ஆறு பேருக்கு குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையம் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவுசெய்து கடந்த 11 ஆம் தேதி ஆணையத்தில் ஆஜர் ஆக சொன்னது.

  பள்ளியின் நிர்வாகி மட்டும் ஆஜரான நிலையில் சிவசங்கர் பாபா டேராடூனில் இருப்பதாகவும் அவருக்கு இதய அறுவைசிகிச்சை செய்ப்பட்டுள்ளதால் ஆணையத்தில் ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

  பள்ளி தாளாளரிடம் விசாரணையை செய்துள்ளனர் ஆணைய அதிகாரிகள். ஆனால் குழந்தைகள் நல அதிகாரிகளின் கேள்விக்கு தட்டிக்கழிக்கும் வகையிலையே பள்ளி நிர்வாகிகள் பதில் சொல்லியுள்ளனர்.

  குறிப்பாக பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மாணவிகள் புகார் ஏற்கனவே உங்களிடம் தெரிவித்துள்ளனரா ?அப்படி என்றால் நீங்கள் ஏன் அதை எங்களுக்கு தெரியபடுத்தவில்லை என்று சரமாரியாக கேட்டுள்ளனர்.

  அவர்களின் பதில்கள் அனைத்து கேமிராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் புகார் தெரிவித்த மாணவிகளிடமும் மறைமுகமாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

  இந்நிலையில் சிவசங்கர் பாபா மீது பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை போலிசார் போக்சோ வழக்கு பதிவு செய்ய உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  காவல்துறை வழக்குபதிவு செய்தால்தான் முறையான காவல்துறை தனது விசாரணையை தொடங்கும். அதில் தான் சிவசங்கர் பாபாவின் உண்மை முகம் வெளிவரும் என்று தெரிகின்றது.
  Published by:Karthick S
  First published: