முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முதலீடு செய்த 5 லட்சம் ரூபாயைத் திருப்பிக் கேட்டவர் கொலை: மதுரையில் கொடூரம்

முதலீடு செய்த 5 லட்சம் ரூபாயைத் திருப்பிக் கேட்டவர் கொலை: மதுரையில் கொடூரம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பங்குச்சந்தை முதலீடு பற்றி புரிந்துகொண்டு நம்பிக்கையான, பதிவு செய்துள்ள முகவர்களின் மூலம்தான் முதலீடு செய்ய வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

பங்குச் சந்தையில் முதலீடு செய்த 5 லட்சம் ரூபாயைத் திருப்பித் தரும்படி கேட்ட காப்பீட்டு முகவரை, நண்பர்களே எரித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை மகால் முதல் தெருவைச் சேர்ந்தவர் 53 வயதான சிவக்குமார்; காப்பீட்டு நிறுவனத்தில் முகவராகப் பணியாற்றி வந்தார். முகவர்களுக்கான கூட்டத்தில் மதுரையைச் சேர்ந்த 26 வயதான விக்னேஷ் என்ற காப்பீட்டு முகவரை சிவக்குமார் சந்தித்துள்ளார்.

அப்போது பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து சிவக்குமாரிடம் விக்னேஷ் விளக்கியுள்ளார். அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில், சிவக்குமார் 5 லட்சம் ரூபாயைக் கொடுத்து தனது பெயரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்படி கூறியுள்ளார். பிறகு, சிவக்குமாரிடம் இருந்து வாங்கிய 5 லட்சம் ரூபாயை சந்தையில் முதலீடு செய்து விட்டதாக விக்னேஷ் கூறியுள்ளார்.

சிவக்குமார் பெயரிலான பங்குச் சந்தை பரிவர்த்தனைகளையும் விக்னேஷே மேற்கொண்டு வந்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு, சிவக்குமாரை அழைத்த விக்னேஷ், முதலீடு அனைத்தும் பங்குச் சந்தையில் நஷ்டமாகி விட்டதாகக் கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த சிவக்குமார், விக்னேஷ் சொல்வதை நம்பாமல், தனது பணத்தைத் திரும்ப கொடுத்துவிடு என விக்னேஷை மிரட்டியுள்ளார். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையிலும், பணத்தைக்கேட்டு, விக்னேஷுக்கு பல வகைகளில் நெருக்கடி கொடுத்துவந்துள்ளார் சிவக்குமார்.

இதனால் சிவக்குமாரை கொலைசெய்ய திண்டுக்கல்லைச் சேர்ந்த கணேஷ்பாபுவை அணுகிய விக்னேஷ், கொலைக்கான திட்டத்தை தீட்டியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை சிவக்குமார் வீட்டிற்குச் சென்ற விக்னேஷ், தனது நண்பர் பணம் தருகிறார் வாங்கிக்கொள்ளுங்கள் என அழைத்துச் சென்றிருக்கிறார்.

இருவரும் பைக்கில் சமயநல்லூர் சென்றுள்ளனர். மறுமுனையில் திண்டுக்கல்லில் இருந்து காரில் வந்த கணேஷ்பாபு, இருவரையும் சந்தித்துள்ளார். பணத்தை சாலையில் வைத்து தர வேண்டாம்; மறைவான இடத்திற்குப் போகலாம் எனக் கூறி முட்புதரான பகுதிக்கு சிவக்குமாரை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, கணேஷ்பாபு மறைத்து வைத்திருந்திருந்த கத்தியால், சிவக்குமாரை குத்திக்கொலை செய்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் விழுந்த சிவக்குமாரை அடையாளம் தெரியாத சடலமாக்கிவிட்டால் போலீசில் சிக்கமாட்டோம் என அம்மிக் கல்லால் முகத்தைச் சிதைத்தனர். எந்தத் தடயமும் இருக்கக் கூடாது என்பதற்காக பெட்ரோலை ஊற்றி சடலத்திற்கு தீ மூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

சடலம் எரிவது பற்றி தகவல் அறிந்து அங்கே சென்ற சமயநல்லூர் போலீசார், அங்கு கிடைத்த ஆதார் கார்டைக் கொண்டு அது சிவக்குமாரின் சடலம் என்பதை உறுதிசெய்தனர். சிவக்குமாரின் மனைவியிடம் விசாரித்ததில், விக்னேஷ் அவரை அழைத்துச் சென்றதும், பணப்பிரச்னை இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. விக்னேஷை மடக்கிப் பிடித்த போலீசார், அவரைக்கொண்டு கணேஷ்பாபுவையும் போலீசார் கைது செய்தனர்

பங்குச்சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்தில் இருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொண்டு, நம்பிக்கையான, பதிவு செய்துள்ள முகவர்களின் மூலமே முதலீடு செய்ய வேண்டும் என போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see:

First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Madurai, Share Market