மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய சிவசங்கர் பாபா டெல்லியில் கைது - சி.பி.சி.ஐ.டி அதிரடி

Youtube Video

பாலியல் புகாரில் குற்றம்சாட்டப்பட்ட சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் சாத்தங்குப்பம் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளாக சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகின்றது. இந்தப் பள்ளியின் நிறுவனர் தான் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா. கூளிங்கிளாஸ், பேன்ட், சர்ட் , உயரக சொகுசு கார்கள் ,கண்ணாடி மாளிகை வீடு என்று மற்ற சாமியார்களை விட ஹய்கிளாஸ் மனிதனாக காட்டி கொள்பவர் சிவசங்கர் பாபா. தன்னை கடவுளாக அறிவித்துக்கொண்டவர். இவரது பள்ளியில் படித்த மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தற்போது முன்னாள் மாணவிகள் ஏராளமானோர் புகார் தெரிவித்துவருகின்றனர்.

பி.பி.எஸ்.பி பள்ளி, செட்டிநாடு பள்ளி, மகரிஷி வித்யா மந்திர் ஆகிய பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் வெளிவந்த நிலையில் சிவசங்கர் பாபா மீதும் பாலியல் புகார் வெளிவந்தது. பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவருவதாக முன்னாள் மாணவிகள் புகார் தெரிவித்தனர்.

சிவசங்கர் பாபா, அவரை கிருஷ்ணரின் அவதாரமாக காட்டிக்கொண்டு தனது பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் போது ஆனந்த நடனம் ஆடுவது மிக பிரபலம். அதன் ஒரு பகுதியாக மாணவிகளிடம் அத்துமீறுவார் என்றும், எதிர் கேள்வி கேட்கும் மாணவ, மாணவிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பள்ளியை விட்டு நீக்கப்படுவார்கள் என்றும் புகார்கள் எழுந்தன.

9 மற்றும் 10ம் வகுப்பு மாணவிகளுக்கு குளிர்பானம் என்ற பெயரில் மதுபானங்களை கொடுத்து அவர்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதை தாம் நேரடியாக பார்த்ததாகவும் மாணவி தமது புகாரில் கூறியுள்ளார். சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் கூறிய அடுக்கடுக்கான புகார்கள் சமூகவலைதளங்களில் பூதாகரமாக வெடித்ததையடுத்து, முதற்கட்டமாக, கடந்த ஜூன் 1-ஆம் தேதி தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவர் சரஸ்வதி ரங்கசாமி விசாரணை நடத்தினார். அடுத்தநாள் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் கௌரி அசோகன் நான்குபேர் கொண்ட குழுவுடன் விசாரணை நடத்தினார்.

ஆசிரமத்தில் சிவசங்கர் இல்லாத நிலையில் பள்ளி நிர்வாகத்திடம் மாநில குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தியது. இருப்பினும், மகளிர் ஆணையம் நடத்திய விசாரணைக்கும், குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய விசாரணைக்கும் பள்ளி நிர்வாகம் முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை. விசாரணைக்கு ஆஜராகுமாறு சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மாறாக, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனிலுள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலியின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது தரப்பில் கூறப்பட்டது. இதற்கிடையில், சிவசங்கர் பாபா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வெளிமாநிலங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அவர் மீது லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையில், இன்று மருத்துவமனையில் சிவசங்கர் தப்பி ஓடிவிட்டார். சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமாக உத்தரகாண்ட், டெல்லி ஆகிய பகுதிகளிலும் ஆசிரமங்கள் இருக்கின்றன. எனவே, அங்கு தப்பிச் சென்றாரா என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்தநிலையில், டெல்லி மாநில காவல்துறை உதவியுடன் சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்தனர். இன்று மாலை, அல்லது நாளை காலை சென்னை அழைத்து வரப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் வைத்து முழு விசாரணை நடைபெறும்.
Published by:Karthick S
First published: