ஓசூரை தொடர்ந்து 15 நாட்களில் மீண்டும் நெல்லையிலும் ஆணவ கொலை நடந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காதல் திருமணம் செய்துகொண்ட ஓசூரைச் சேர்ந்த நந்தீஸ்-சுவாதி இளம்தம்பதியினரை சுவாதியின் குடும்பத்தினரே கொலை செய்த கொடூரத்தின் தாக்கம் இன்னும் குறையவில்லை.
இருவரின் கை,கால்களை கட்டி காவேரி ஆற்றில் தூக்கிவீசி கொலை செய்த சுவாதியின் தந்தை உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த ஆணவக்கொலையின் அதிர்ச்சி குறைவதற்கு முன்பே தற்போது இன்னோர் ஆணவக்கொலை தமிழகத்தில் நடந்திருக்கிறது.
கடந்த 20-ம் தேதி, நெல்லை மாவட்டத்தில், வங்கி ஊழியர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக தொடங்கிய போலீஸ் விசாரணை, தற்போது ஆணவக்கொலையில் முடிந்திருக்கிறது.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வெள்ளங்குளியைச் சேர்ந்தவர் இசக்கி சங்கர். களக்காட்டில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியரான இவர், செவ்வாய்க்கிழமை காலை, தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது அவரை வழிமறித்த மர்மநபர்கள் சிலர், ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அளித்த தகவலை அடுத்து, போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இசக்கி சங்கர் கொலைக்கு அவரது காதலும், திருமண முயற்சியுமே காரணம் என்பது தெரியவந்துள்ளது.
இசக்கிசங்கரும், சத்தியபாமாவும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தகவல் கூறப்படுகிறது. இவர்களது திருமணத்திற்கு இசக்கிசங்கர் வீட்டினர் ஒப்புக் கொண்ட நிலையில் சத்தியபாமா தரப்பு தயக்கம் காட்டினர். சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இசக்கிசங்கர் நல்ல பணியில் இருப்பதால், சத்தியபாமாவின் குடும்பத்தினரும் இறுதியில் ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால், சத்தியபாமாவின் 16 வயது சகோதரர் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளார். சகோதரியின் திருமணத்திற்கு குடும்பத்தினர் ஒப்புக்கொண்ட நிலையில், நண்பர்கள் கிண்டல் செய்ததால் இசக்கிசங்கரை கொலை செய்ய சத்தியபாமாவின் சகோதரர் திட்டமிட்டுள்ளார்.
இசக்கி சங்கரின் நகர்வுகளை கவனித்துவந்த சத்தியபாமாவின் சகோதரர், அவர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஆற்றங்கரையில் குளிக்க தனியாகச் செல்வதை கண்டுள்ளார்.
10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்துவரும் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு இசக்கிசங்கரை கொலை செய்ய பட்டாக்கத்தியுன் சத்தியபாமாவின் சகோதரர் சென்றுள்ளார்.
தன்னை கொலை செய்யவருவதை அறிந்துகொண்ட இசக்கி சங்கர் உயிருக்கு பயந்து தப்பியோடியுள்ளார். துரத்தியவர்களில் ஒருவர் இசக்கிசங்கரின் காலில் வெட்டியதால், அவர் தடுமாறி விழுந்துள்ளார்.
இதையடுத்து, சத்தியபாமாவின் சகோதரர் உள்ளிட்டவர்கள் இசக்கிசங்கரை வெட்டி கொலை செய்தனர். ஆனால், எதுவும் தெரியாததுபோல், வழக்கம் போல் 3 பேர் பள்ளிக்குச் சென்றுள்ளனர். 2 பேர் வேலைக்குச் சென்றுள்ளனர்.
இதனால், யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால் போலீசாரும் திணறினர். ஆனால், தொலைப்பேசி அழைப்புகளைக்கொண்டு, விசாரணை நடத்தியதில் குற்றவாளியை போலீசார் கண்டுபிடித்தனர்.
விசாரணையில், இசக்கிசங்கரை கொலை செய்ததை 5 பேரும் ஒப்புக்கொண்டதாகவும், பட்டாக்கத்தியை பறிமுதல் செய்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
ஆனால், இந்த வழக்கில் இன்னோர் அதிர்ச்சி என்னவென்றால், இசக்கிசங்கர் படுகொலை செய்யப்பட்ட தகவலை கேள்விபட்ட சத்தியபாமா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதுதான்.
இசக்கி சங்கரின் வீட்டிற்கு அருகில் சில வீடுகள் தள்ளி, சத்தியபாமாவின் வீடு உள்ளது. புதன் கிழமையன்று, கல்லுாரி மாணவியான சத்தியபாமா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மாணவியின் சடலத்தை மீட்க முயன்றனர். ஆனால், இசக்கி சங்கர் கொலை குறித்து தனது மகளிடம் போலீசார் விசாரித்ததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என தந்தையும் உறவினர்களும் குற்றம் சாட்டினர்.
காதலித்த இருவரும் தற்போது உயிருடன் இல்லை. இவர்களின் காதல் மட்டும் மரிக்காமல் உயிருடன் உள்ளது என அப்பகுதியினர் கண்ணீர்விடுகின்றனர். பெரியார் மண் என்று அழைக்கப்படும் தமிழகத்தில் ஆணவக்கொலைகள் அதிகரிப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதுவும் இந்த ஆணவக்கொலையில் ஈடுபட்ட அனைவருமே பள்ளி மாணவர்கள் என்பதுதான் அதிர்ச்சியின் உச்சகட்டமாக உள்ளது.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Honor killing, Tirunelveli