சட்டப்பேரவை கேள்வி நேரத்தில்
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், வேதாரண்யம் பகுதியில்
புயல் மற்றும்
மழை காலங்களில் மின்தடை ஏற்பட்டு, அதை சரி செய்வதற்கான அதிக நேரம் எடுக்கப்படுவதால், தலைஞாயிறு பேரூராட்சியில் புதிய துணை மின் நிலையம் அமைத்து தரவேண்டும் என்று கோரினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் சீரான மின்சாரம் வழங்க 216 துணை மின் நிலையங்கள் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதில் 193 துணை மின்நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
மீதமுள்ள 23 துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்படும் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார். அதே நேரத்தில் தலைஞாயிறு பேரூராட்சியில் இந்த ஆண்டு துணை மின் நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதேபோல், சென்னை வேளச்சேரியில் 250 மின்மாற்றிகள் மட்டுமே உள்ள நிலையில், 500 மின்மாற்றிகள் இருந்தால் தான் சீரான மின் விநியோகம் மேற்கொள்ள முடியும் என்று அதிகாரிகள் கூறுவதாகவும், எனவே புதிய துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா கேள்வி எழுப்பினார்.
Must Read : துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி: மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்
இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னையில் 12 துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வேளச்சேரியிலும் இந்த ஆண்டே புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும் என்றும், அதன் பின்னர் மின் விநியோகம் சீராகும் என்றும் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.