கரூர் தொகுதியில் தோல்வி பயத்தில் அதிமுகவினர் அடிதடி அராஜகத்தில் இறங்கி வன்முறையை தூண்டி வருகின்றனர் என்று தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூரில் நேற்றைக்கு முந்தைய இரவு தி.மு.க - அ.தி.மு.கவினர் இடையே ஏற்பட்ட மோதலில் அ.தி.மு.கவினர் தாக்கியதில் காயமடைந்த மூன்று தி.மு.க இளைஞர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கரூரில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தி.மு.க மாநில மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி நேற்று மருத்துவமனைக்குச் சென்று மூன்று பேரின் நலம் விசாரித்தார். இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, ‘நேற்று இரவு, தி.மு.க தொண்டர்கள் கார்த்தி, ரஞ்சித் இருவரை அ.தி.மு.க நிர்வாகிகள் கட்டையால் தாக்கி உள்ளனர்.
இதனால், கார்த்தி படுகாயத்துடன் கோவை மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க வேட்பாளர் தூண்டுதலின் பேரில் இந்த வன்முறை அராஜகம் நடந்து வருகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர்.
அ.தி.மு.கவின் வன்முறை அராஜகத்தை அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். அ.தி.மு.க அராஜகத்தால் கரூர் தொகுதியில் உயிர் பலி ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.கவின் அராஜக வன்முறைச் செயலை தமிழக தேர்தல் ஆணையர், மற்றும் டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக கூறினார். அ.தி.மு.கவினர் தாக்கிய வீடியோ ஆதாரத்தை வெளியிட்டும், அ.தி.மு.க வேட்பாளர் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வீடியோ ஆதாரத்தையும் செந்தில் பாலாஜி வெளிட்டார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.