சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ சுயேட்சையாக போட்டியிட முடிவு

சந்திரசேகரன்

சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் அதிமுக எம்.எல்.ஏ சந்திரசேகரன் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.

 • Share this:
  நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் காரவள்ளி அடிவார பகுதியை சேர்ந்தவர் சி. சந்திரசேகரன்(52). தொடக்கத்தில் நாமக்கல் மாவட்ட திமுகவில் மாவட்ட துணை செயலாளராக பதவி வகித்து வந்தார். 1996 -ம் ஆண்டு சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். அதன் பின்னர் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார்.

  2016-ம் ஆண்டு அதே சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. திமுக வேட்பாளர் பொன்னுசாமியை விட சுமார் முப்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.சேந்தமங்கலம் மட்டும் கொல்லிமலைக்கு பகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த அவர் 2021 சட்டப்பேரவை தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தார்.

  மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில் ஏற்கெனவே எம்.எல்.ஏ.வாக இருந்த 4 பேர் மீண்டும் போட்டியிடும் நிலையில் சந்திரசேகரனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அமைச்சர் தங்கமணி சந்திரசேகரன் பெயரை பரிந்துரைக்கவில்லை என அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  வியாழக்கிழமை காலை ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் சேந்தமங்கலம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். இதனை வலியுறுத்தும் விதமாக கொல்லிமலையில் இன்று மதியம் 2 மணியளவில் மலைவாழ் மக்களை திரட்டி மாபெரும் ஆர்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

  இது குறித்து அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரனிடம் கேட்டபோது வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தேன். வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சுயேட்சையாக களம் இறங்க உள்ளேன். கொல்லிமலையில் மணிக்கு மலைவாழ் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகிறேன் என்றார்.

  செய்தியாளர் : ரவி

  நாமக்கல்
  Published by:Sheik Hanifah
  First published: