பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் - தமிழக அரசு

அண்ணா பல்கலைக்கழகம்

இதற்காக மாணவர்கள் மீண்டும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  பொறியியல் படிப்புகளுக்கு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஆன்லைன் வாயிலாக நடந்த செமஸ்டர் தேர்வில் குளறுபடி ஏற்பட்ட நிலையில், மீண்டும் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

  கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடந்திருக்க வேண்டிய பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. 4 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகள் 2 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே வெளியானது. பல்வேறு குளறுபடிகள் காரணமாக ஏராளமான மாணவர்களுக்கு முடிவுகள் வெளியிடப்படவில்லை என புகார் எழுந்தது.

  இந்தநிலையில் இன்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், உயர்கல்வித் துறை செயலாளர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அவரது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.

  இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் நடைபெற்ற தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக மாணவர்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளது.

  இதனையடுத்து மாணவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் மற்ற பல்கலைக்கழகங்களில் நடைபெறுவது போல மூன்று மணி நேரத்திற்கு ஆன்-லைன் வழியில் பொறியியல் மாணவர்களுக்கும் குழப்பங்கள் இன்றி மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று கூறினார்.

  இதற்காக மாணவர்கள் மீண்டும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவித்த அவர், ஏற்கனவே தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களும் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பினால் மீண்டும் தேர்வினை எழுதிக்கொள்ளலாம் என்று கூறினார்.

  மேலும், கலை மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்கள் உயர் படிப்புகளுக்கு செல்வதற்கு உதவக்கூடிய வகையில் செமஸ்டர் தேர்வுகளை உடனடியாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், வரும் 24ம் தேதி ஊரடங்கு காலம் முடிவடைந்த பின்னர் 25ம் தேதி முதல் 1 மாத காலத்திற்குள் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறினார்.

  அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார்கள் மீது தமிழக அரசின் நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள் என்று பதிலளித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: