மனுநீதி விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த நினைத்தால் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றுஅமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
மனு நூலில் பெண்கள் குறித்து இழிவாக குறிப்பிட்டுள்ளதாக திருமாவளவன் பேசியதை தொடர்ந்து பெரும் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு, நடைமுறையில் இல்லாத ஒன்றை வைத்து இப்போது பிரச்சனை எழுப்புவதன் அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார். திருமாவளவன் பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையேல் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதை தொடர்ந்து திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் குஷ்பு தலைமையில் போராட்டம் நடைபெறும் என பாஜக அறிவித்தது. அதற்கு பதலடி தரும் வகையில் விசிகவும் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் இருதரப்பு போராட்டத்திற்கும் போலீசார் தடை விதித்தனர். தடையை மீறி போராட்டம் நடத்தப்போவதாக பாஜக அறிவித்ததை தொடர்ந்து, கடலூர், நாகை மாவட்ட எல்லைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தபட்டது.
சென்னையில் இருந்து சிதம்பரத்துக்கு காரில் செல்ல முயன்ற குஷ்புவை செங்கல்பட்டு மாவட்ட போலீசார் மாமல்லபுரம் அருகே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். குஷ்பு கைது செய்யப்படதற்கு எதிர்ப்பும், ஆதரவும் வலுத்து வருகிறது.
இந்நிலையில் குஷ்பு கைது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “மனுநீதி விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த நினைத்தால் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. குஷ்பு கைது செய்யப்பட்டது பாராட்டத்தக்கது“ என்றார்.
மேலும், ஒத்த கருத்தோடு தேர்தலை சந்திக்க வேண்டாம் என்பது தான் கூட்டணி தர்மம். அனைத்து கூட்டணி கட்சிகளும் நல்ல உறவு வைத்திருக்கிறார்கள். பாமக கட்சி துணை முதல்வர் பதவி கேட்பதும், விஜயகாந்த் மகன் மூன்றாவது அணி அமையும் என்பதும் அவர்களின் கட்சி பலத்தை காட்டுவதற்கான பேச்சு மட்டுமே என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்