Home /News /tamil-nadu /

புதுக்கோட்டையில் சுய ஊரடங்கு அறிவித்து முன்மாதிரியாக திகழும் கிராமம்

புதுக்கோட்டையில் சுய ஊரடங்கு அறிவித்து முன்மாதிரியாக திகழும் கிராமம்

News 18

News 18

தங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாக கூடாது என்று எண்ணிய கிராமத்தினர் ஊர்க்கூட்டம் நடத்தி ஊரடங்கை அறிவித்துள்ளனர்

  • News18
  • Last Updated :
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் இதுவரை கொரோனாவால் 90-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்நிலையில் சிவகங்கை- புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லை பகுதியில் உள்ள பொன்னமராவதி அருகே தொட்டியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கட்டையாண்டிபட்டியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் பெரும்பாலும் கட்டிட கூலி தொழிலையே நம்பி உள்ள மக்கள் தங்கள் வாழ்க்கையை அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து நடத்திவந்தனர். இந்நிலையில் பொன்னமராவதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 15க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாக கூடாது என்று எண்ணிய கிராமத்தினர் ஊர்க்கூட்டம் நடத்தி கடந்த 17-ம் தேதி முதல் வருகின்ற 30-ம் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த 14 நாட்களும் அந்த கிராமத்திலுள்ள யாரும் எந்த ஒரு பணிக்கும் வெளியே செல்லக் கூடாது என்று அறிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த ஊருக்கு செல்லும் வழியில் பேரிகார்டு மற்றும் முட்களால் தடுப்பு அமைத்து கொரோனா தொற்று காரணமாக தங்கள் பகுதிக்கு வெளி நபர் யாரும் உள்ளே வரக்கூடாது என்று விளம்பர பலகையும் வைத்துள்ளனர்.

News 18


மேலும் ஊர் எல்லைப் பகுதியில் கிருமிநாசினி சனிடைசர் மஞ்சள் வேப்பிலை கலந்த நீர் சோப்பு வாளியில் தண்ணீர் உள்ளிட்டவற்றை வைத்து அந்த ஊரில் உள்ளவர்கள் வெளியே சென்று வரும் பொழுது கை, கால் முகம் கழுவிவிட்டு தான் வர வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது மற்ற கிராமத்திற்கு முன்மாதிரியாக இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து, அந்த பகுதி மக்கள் கூறுகையில், பொன்னமராவதி பகுதிகளில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது எங்கள் கிராமம் புதுக்கோட்டை சிவகங்கை எல்லைப்பகுதியில் உள்ளதால் தங்கள் கிராமத்தினர் கொரோனா தொற்றுக்கு ஆளாகக் கூடாது கிராம மக்கள் உயிரை காக்க வேண்டும் என்று எண்ணி ஊர்க்கூட்டம் நடத்தி பொது மக்கள் ஆதரவோடு 14 நாட்கள் எங்கள் கிராமத்தினருக்கு முழு ஊரடங்கு அமல் படுத்தியுள்ளோம்,

மூன்று நாளைக்கு ஒருமுறை அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டிற்கு ஒரு நபர் மட்டுமே வெளியே சென்று வருவார்கள். அவர்களும் உள்ளே வரும் பொழுது எல்லைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கிருமிநாசினிகள் சோப்பு உள்ளிட்டவற்றை வைத்து கை கால் முகங்களை கழுவிய பின்னரே உள்ளே வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை எங்கள் கிராமத்திற்குள் அனுமதிக்கமாட்டோம். வெளியே செல்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளோம். மேலும் வீட்டில் உள்ளவர்களும் தனிமனித இடைவெளியோடு இருக்க வேண்டும் முகக் கவசங்கள் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். எங்கள் பகுதியில் பெரும்பாலும் கட்டிட தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர் 14 நாட்கள் யாரையும் பணிக்கு செல்லக்கூடாது என்று கூறியுள்ளோம்.

பல்வேறு இடங்களுக்கு அவர்கள் பணிக்கு செல்வதால் அவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவக் கூடும் என்பதால் அவர்களும் ஊர் கட்டுப்பாட்டின் படி 14 நாட்கள் பணிக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருக்க ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். மேலும், எங்கள் பகுதிக்கு அரசு கொடுத்த ரேஷன் பொருட்களை தவிர மற்ற எந்த ஒரு நிவாரணமும் எங்களுக்கு வழங்கவில்லை.

எங்கள் கிராமத்தை அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இதுநாள்வரை கண்டுகொள்ளவில்லை. எங்கள் கிராமத்தினர் சொந்த முயற்சியால் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 14 நாட்கள் ஊரடங்கு அறிவித்து அதன்படி பல்வேறு நிபந்தனைகளை எங்களுக்கு நாங்களே விதித்து செயல்படுத்தி வருகின்றோம். எங்கள் கிராமத்தையும் அரசு கருத்தில் கொண்டு எங்கள் பகுதி மக்களுக்கு போதிய உதவி அளித்தால் எங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தனர்.
Published by:Sankar
First published:

Tags: Pudukottai

அடுத்த செய்தி