தமிழகம் முழுவதும் 1 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கிய நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்துவந்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். நிகழ்வில், எம்.எல்.ஏ இனிக்கோ இருதயராஜ், குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் இளம்பரிதி, மண்டலத் தலைவர் மதிவாணன், கவுன்சிலர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதன்பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட அதிகரித்து வருகிறது. எனவே உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம்.
வரும் கல்வியாண்டில், 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்திருப்பது உண்மை தான்.
ALSO READ | அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க செயலி: தமிழக அரசு அறிமுகம்!
செல்போனை மாணவர்கள் வகுப்பறைகளுக்கு கொண்டு வரக்கூடாது. மீறிக் கொண்டு வந்தால் செல்போன் பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மீண்டும் தரப்படமாட்டாது. மாணவர்கள் மனதளவில் இறுக்கத்துடன் உள்ளனர். எனவே, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளி திறந்து, 5 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட மாட்டாது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மூலம் மாணவர்களுக்கு நாள்தோறும் இரண்டு மணி நேரம் உளவியல் பயிற்சிகள் வழங்கப்படும்.
90 சதவீத மாணவர்கள் தற்போது தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத, 10 சதவீத மாணவர்கள் சுகாதாரத் துறை மூலமாக உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.