’தி பேமிலி மேன் 2’ ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டும்.. அமேசானுக்கு சீமான் கடிதம்!

’தி பேமிலி மேன் 2’ ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டும்.. அமேசானுக்கு சீமான் கடிதம்!

12 கோடி தமிழ்த்தேசிய இன மக்களின் உள்ளத்து உணர்வுகளை உரசிப்பார்ப்பதாகவும், தரம்தாழ்த்துவதாகவுமே இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதனை மீண்டும் உரைக்கிறேன்.

 • Share this:
  ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடர் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்தாவிடில் அமேசான் நிறுவனத்தின் அனைத்து சேவைகளையும் உலகத்தமிழர்கள் புறக்கணிப்போம் என அமேசான் பிரைம் தலைமை அதிகாரிக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதியுள்ளார்.

  இதுதொடர்பாக அமேசான் நிறுவனத்திற்கு சீமான் எழுதியுள்ள கடிதத்தில், உலகமெங்கும் வாழும் தமிழர்களின் பெரும் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜூன் 04, 2021 அன்று உங்களது அமேசான் பிரைம் வீடியோ தளத்தில், ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடர் வெளியாகி, தமிழர்களுக்கு மிகுந்த மனவலியை ஏற்படுத்தியுள்ளது.

  தமிழர்களைச் சீண்டும் நோக்கில் திட்டமிட்ட வன்மத்தோடு எடுக்கப்பட்டுள்ள அத்தொடரில் வீரம்செறிந்த ஈழ விடுதலைப்போராட்டத்தை மலினப்படுத்தி, கொச்சைப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருக்கிற சித்தரிப்புகளும், காட்சியமைப்புகளும் குறித்துக் கேள்வியுற்றுப் பேரதிர்ச்சியடைந்தேன். தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு இராணுவமான தமிழீழ விடுதலைப்புலிகளை மிக மோசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் தோற்றம் கொள்ளச்செய்து காட்சிப்படுத்தியுள்ள இத்தொடர் மிகுந்த உள்நோக்கம் கொண்டே எடுக்கப்பட்டிருக்கிறது.

  தமிழர்களின் தாயகத்தை மொத்தமாய் ஆக்கிரமித்து, ஆதிக்கம் செய்து, அழித்தொழித்த அரசப்பயங்கரவாதிகளான சிங்கள ஆட்சியாளர்களின் குரல் போல ஒலித்து, தமிழர்களை மிகக்கீழ்த்தரமாகக் காட்டி, போர்வெறிக் கொண்ட பயங்கரவாதிகளாவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்க முற்படும் வகையில் இணையத்தொடரை உருவாக்கியிருப்பதற்கு எனது வன்மையான கண்டனத்தைப் பதிவுசெய்கிறேன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சிங்களப் பேரினவாதம், இந்திய ஒன்றியம் உள்ளிட்ட சில உலக நாடுகளுடன் கூட்டுச்சேர்ந்து ஒருமித்து ஈழ நிலத்தில் நடத்திய கோர இனப்படுகொலையில் 2 இலட்சம் தமிழர்களைச் சாகக்கொடுத்துவிட்டு அதற்கான எந்த நீதியையும் பெற முடியா கையறு நிலையில், உலக அரங்கில் தமிழர்கள் நாங்கள் கூக்குரலிட்டுப் போராடிக் கொண்டிருக்கையில் தமிழர்கள் பக்கமிருக்கும் நியாயத்தையோ, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியையோ, அங்கு நடந்த உண்மைச்செய்திகளையோ, ஈழ விடுதலைப்போராட்டத்தின் பெரும் வரலாற்றையோ பதிவுசெய்ய வாய்ப்பிருந்தும், அதனைச் செய்யாது தமிழர்களுக்கெதிராக நச்சுக்கருத்தோடு ஒரு படைப்பை உருவாக்கம் செய்து சிங்களர்களின் தரப்பு வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையிலான கருத்துருவாக்கங்களைக் கொண்டுள்ள இதுபோன்ற இணையத்தொடர்கள் முழுக்க முழுக்கத் தடைசெய்யப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது.

  இந்நூற்றாண்டின் பாரிய இனப்படுகொலைக்கு ஆளாகிப் பெரும் காயம்பட்டு அழிவின் விளிம்பில் நிற்கும், 12 கோடி தமிழ்த்தேசிய இன மக்களின் உள்ளத்து உணர்வுகளை உரசிப்பார்ப்பதாகவும், தரம்தாழ்த்துவதாகவுமே இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதனை மீண்டும் உரைக்கிறேன்.

  ஆகவே, தமிழர்களையும், தமிழர்களின் வீரம்செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும் மிக மிக இழிவாகச் சித்தரித்து அதனைத் தவறாகக் காட்சிப்படுத்தியிருக்கும், ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடர் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன். அவ்வாறு செய்யத்தவறி எங்கள் உணர்வுகளை அலட்சியம் செய்து உதறித்தள்ளினால், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து, அமேசான் பிரைம் வீடியோ உட்பட அமேசான் நிறுவனத்தின் எல்லாச் சேவைகளையும் தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்கச் செய்யும் வகையில் மாபெரும் கருத்துப் பரப்புரையைத் தீவிரமாக முன்னெடுப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: