அரசு மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்டம், பட்டக்காரன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த தம்பி சத்யபிரகாசுவின் மனைவி பரமேசுவரி மகப்பேற்றுக்காக ஏரியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்களது கவனக்குறைவால் மகப்பேற்றின்போது உயிரிழந்த செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன். மனைவியை இழந்து துயருற்றுள்ள தம்பி சத்யபிரகாசிற்கு ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐம்பதாண்டுகாலத் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் உயிர்காக்கும் மருத்துவம் என்பது தனியார் முதலாளிகள் இலாபமீட்டும் விற்பனை சந்தையாகிவிட்ட தற்காலச் சூழலில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வேறுவழியின்றி அரசு மருத்துவமனைகளையே முற்றுமுழுதாக நம்பி மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையுள்ளது. கோடிக்கணக்கான மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகளோ படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு செயல்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
அண்மைக்காலமாக அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அலட்சியம் மற்றும் தவறான மருத்துவத்தினால் இதுபோன்று இனியும் யாதொரு உயிரும் பறிபோகாதவாறு காக்க, அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்ய, தொடர்ச்சியாகத் தீவிர கண்காணிப்பைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இதையும் படிங்க: 299 பேரில் ஒருவர் கூட தமிழர் இல்லை.. இங்குள்ளவர்களுக்கு தகுதியில்லையா? - என்எல்சி நிறுவனத்துக்கு வைகோ கண்டனம்
மேலும், கவனக்குறைவாக இருந்து தங்கை பரமேசுவரியின் உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது உரியச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தங்கையின் குடும்பத்தினருக்கு ரூ.50 இலட்சம் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும், அவரது கணவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.