• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை மாநகராட்சியைத் தனித் தொகுதியாக அறிவிக்கவேண்டும்! திருமாவளவன் கருத்தை ஆமோதிக்கும் சீமான்

சென்னை மாநகராட்சியைத் தனித் தொகுதியாக அறிவிக்கவேண்டும்! திருமாவளவன் கருத்தை ஆமோதிக்கும் சீமான்

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆதித்தமிழர்கள் அதிகம் வசிக்கக் கூடிய சென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் இந்தாண்டு இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க, தி.மு.க ஆகிய கட்சிகள் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. இந்தநிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், ‘உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிற சூழலில் அதற்கு முன்பாக ஆதித்தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய சென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவித்து ஆதித்தொல்குடி மக்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என்கிற கருத்தாக்கம் வலுப்பெற்று வருகிறது. அது மிக நியாயமானது; தார்மீகமானது. நாம் தமிழர் கட்சி அதனை முழுமையாக ஏற்று, வழிமொழிகிறது.

    சென்னையின் பூர்வக்குடிகளே ஆதித்தமிழர்கள்தான்; சென்னை எனும் மாநகரமே ஆதித்தமிழ் மக்களுக்குச் சொந்தமானதுதான். அவர்கள் இன்றைக்கு மெல்ல மெல்ல நகரத்தின் தலைப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு அடிப்படை வசதிகளும், எவ்வித வாழ்வாதாரமுமற்ற கண்ணகி நகருக்கும், கல்லுக்குட்டைக்கும், செம்மஞ்சேரிக்கும் துரத்தியடிக்கப்பட்டு வலுகட்டாயமாகக் குடியமர்த்தப்படுகிறார்கள். வந்தாரை வாழ வைக்கும் இந்நிலத்தில் வந்தவர், போனவரெல்லாம் வசதியாக செம்மார்ந்த வாழ்க்கை வாழ்கிறபோது ஆதிக்குடிகள் சென்னையைவிட்டே அதிகாரத்தின் மூலம் விரட்டியடிக்கப்படுவது எதன்பொருட்டும் சகிக்க முடியாதப் பெருங்கொடுமையாகும்.

    ஆகவே, அத்தகையப் பூர்வக்குடிகளுக்கானப் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டும் பொருட்டு சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாகத் தேர்வுசெய்யப்படாது மறைமுகத்தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் ஏறக்குறைய 14,000 துணைத்தலைவர் பதவிகளுக்கும் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசிற்குக் கோரிக்கை விடுக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக, சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிக்கவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் வலியுறுத்தியிருந்தார்.

    Also see:


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: