இக்கட்டான இத்தருணத்திலாவது பிரிவினைவாத அரசியலை கைவிட வேண்டும் - சீமான்

சீமான் (கோப்புப் படம்)

தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்குக் கொரோனோ நோய்த்தொற்று பரவியது எதிர்பாராது நிகழ்ந்த ஒரு விபத்து என சீமான் கூறினார்.

 • Share this:
  இக்கட்டான இத்தருணத்திலாவது பிரிவினைவாத அரசியலை கைவிட வேண்டும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ”டெல்லி நிஜாமுத்தீனில் உள்ள தப்லீக் ஜமாத் மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்றவர்களுக்குக் கொரோனோ நோய்த்தொற்று பரவியது என்பது எதேச்சையானது. கெடுவாய்ப்பாக எதிர்பாராது நிகழ்ந்த ஒரு விபத்து. ஆனால், அதற்கு மதச்சாயம் பூசி, இந்நெருக்கடி காலக்கட்டத்திலும் மதத்துவேசம் பேசி, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள முனையும் மதவாதிகளின் இழிவான அரசியல் மனிதத்தன்மையற்றது. அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்த மத்திய அரசே தனது ஆளுகைக்குட்பட்டிருக்கும் டெல்லியில் பல்லாயிரக்கணக்கில் மக்களைக் கூடவிட்டு வீதியில் நடந்தே பயணப்பட வைத்து சமூக விலகலை தகர்த்ததும், ஊரடங்கு உத்தரவு விடுக்கப்பட்ட அடுத்த நாளே உத்தரபிரதேசத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அம்மாநில பாஜக அரசே முன்நின்று அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியதும்தான் நாட்டைப் பிளக்கும் கொடிய மதவாத அரசியல்.

  அத்தகைய பிரிவினைவாத அரசியலை இக்கட்டான இத்தருணத்திலாவது கைவிட்டு மதவுணர்வைப் புறந்தள்ளி, துளியளவாவது மனிதத்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்துகிறேன். அண்ணல் அம்பேத்கர் கூறியதை மீண்டும் சொல்கிறேன், ’உங்களிடமிருக்கும் இரக்க குணத்தையும் மனிதாபிமானத்தையும் செயல்படுத்தத் தொடங்குங்கள், இருந்தால் அதைச் செயல்படுத்திக்காட்டுங்கள்’.”

  இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

  Also see:
  Published by:Rizwan
  First published: