முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வாடகை வாகன ஓட்டுநர்களின் கடன் தவணைகளை வசூலிக்க கால அவகாசம் அளிக்க சீமான் கோரிக்கை

வாடகை வாகன ஓட்டுநர்களின் கடன் தவணைகளை வசூலிக்க கால அவகாசம் அளிக்க சீமான் கோரிக்கை

சீமான்

சீமான்

முழு ஊரடங்கு காரணமாக நெடுநாட்களாக வாகனங்கள் இயக்கப்படாததால் வாடகை வாகன ஓட்டுநர்களின், வாடகை வாகனத் தொழிலானது இழப்பையே சந்தித்து வருவதா சீமான் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன ஓட்டுநர்களின் கடன் தவணைகளை வசூலிக்க ஓராண்டு காலம் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக அனைத்துத் தொழில்களும் பெருமளவில் முடங்கிப்போயுள்ளது. இதன் காரணமாக வாடகைக்கு வாகனங்களை இயக்கும் தொழில் புரிவோரும், அதில் பணிபுரியும் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் என அனைத்துத்தரப்பினரும் தொழில் நசிவால் வருமானமின்றி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக, தினக்கூலிக்கு வாகனங்களை இயக்கி வந்த வாடகை வாகன ஓட்டுநர்கள், தங்களது வாகனக்கடனுக்கான மாதத் தவணையைக்கூடச் செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். முழு ஊரடங்கு காரணமாக நெடுநாட்களாக வாகனங்கள் இயக்கப்படாததால், சிறிதும் வருமானமின்றி, வீட்டு வாடகை, மின் கட்டணம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல், வாழ்வா? சாவா? எனும் கொடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு அறிவித்துள்ளக் கட்டுப்பாடுகள், பெட்ரோல், டீசல் விலை ஆகியவற்றின் அதீத விலை உயர்வு போன்றவைகள் காரணமாக வாடகை வாகனத் தொழிலானது இழப்பையே சந்தித்து வருகிறது.

இவை மட்டுமின்றி, சாலை வரி, சுங்க வரி, மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் போன்றவற்றின் விளைவாக எளிய மக்களால் வாடகை வாகனத்தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாமல் கைவிடும் கொடுமையான சூழலே நிலவுகிறது. இதனால், தமிழகத்திலுள்ள பல்லாயிரக் கணக்கான வாடகை வாகன ஓட்டுநர்களின் குடும்பங்கள் பசியில் வாடி, வறுமையில் உழலும் நிலைக்குத் தள்ளப்பட்டு அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் வாடகை வாகனங்களுக்கான கடன் தவணையை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சிறிதும் மனிதத்தன்மையற்ற செயலாகும். ஆகவே, தமிழக அரசு இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு வாடகை வாகன ஓட்டுனர்கள் வாழ்வு நசிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.

பொதுமுடக்கம் முடிவுற்றாலும் இயல்பு நிலைக்குத் திரும்பக் குறைந்தபட்சம் ஓராண்டு காலமாவது ஆகும் எனும்போது அதனைக் கருத்திற்கொண்டு தமிழக அரசு, வாடகை வாகனக் கடனுக்கான மாதத் தவணைகளை அடுத்த ஆண்டு மே மாதம் வரை கட்டாயப்படுத்தி வசூலிக்கக் கூடாது எனவும், இந்த உத்தரவானது வங்கிகளுக்கு மட்டுமன்றி சிறு, குறு மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் தமிழக அரசு விரிவான உத்தரவினைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் கோருகிறேன்.

Must Read : நீர் இல்லாமல் மீன் இருக்குமா? நீங்கள் இல்லாமல் நாங்கள் இருக்க முடியுமா? : பாஜகவுக்கு தாவிய திரிணாமூல் தலைவர்கள் மம்தாவுக்கு உருக்கமான கடிதம்

மேலும், தமிழகத்தில் வணிக ஓட்டுநர் உரிமம் அல்லது ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள அனைத்து வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் துயர் துடைப்பு நிதியாக ரூ.10,000 வழங்க வேண்டும் எனவும், அனைத்துத்தரப்பு மக்களும் பெரும் பொருளாதாரப் பின்னடைவில் இருப்பதால் தமிழகத்திலுள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் குறைந்தபட்சம் அடுத்த ஓராண்டு காலத்திற்குச் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்குத் தடை விதிக்க முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் கோரி, இப்பேரிடர் காலத்தில் அன்றாடப் பிழைப்புக்கே வழியின்றி அல்லலுறும் வாடகை வாகன ஓட்டுநர்களின் மிக நியாயமான இக்கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மறுவாழ்வளிக்குமாறு நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

First published:

Tags: Loan, Naam Tamilar katchi, Seeman, Taxi