நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும் ஆச்சரியப்படுத்தும் புள்ளிவிவரம்

சீமான்

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெற்று, அந்த கட்சியினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 • Share this:
  தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. 159 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சி இடம் பெறாமல் இருந்த நிலையில் மீண்டும் ஆட்சி அமைய உள்ளதை அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். அதிமுக 75 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் வெற்றிபெற்ற வாக்குகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

  கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 40.88 சதவீத வாக்குகளை பெற்றதோடு, 136 இடங்களிலும் வென்று ஆட்சியை தக்கவைத்தது. அதே நேரத்தில் திமுக 31.39 சதவீத வாக்குகளை வாங்கி, 89 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. தற்போது நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக 36.3 சதவீத வாக்குகளை பெற்றிருப்பதோடு, 125 இடங்களிலும் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதிமுக 33.29 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சியை பறிகொடுத்துள்ளது. அத்துடன் இந்த சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 234 தொகுதிகளில் சிறப்பாக செயலாற்றி உள்ளது.

  திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக மிக அதிகமாக 29 லட்சத்து 58 ஆயிரத்து 458 வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சி அசத்தி உள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, கடந்த சட்டசபைத் தேர்தலில் 1.07 சதவீத வாக்குகளை மட்டுமே வாங்கியிருந்தது. ஆனால், இந்த முறை வாக்கு சதவீதத்தில் 3வது பெரிய கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்துள்ளது. தேர்தலில் ஒரு தொகுதியில் கூட நாம் தமிழர் கட்சி வெற்றிபெறாவிட்டாலும், வாக்கு சதவீதம் 6.85தாக உயர்ந்திருப்பது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  அடுத்தடுத்தபடியாக வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் காங்கிரஸ் 19 லட்சத்து 6 ஆயிரத்து 578 வாக்குகளும், பாமக 17 லட்சத்து 45 ஆயிரத்து 229 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பாஜக 11 லட்சத்து 80 ஆயிரத்து 456 வாக்குகளை பெற்றுள்ளது. அமமுக, மக்கள் நீதி மய்யத்தைவிட பாஜக அதிக வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  Published by:Vijay R
  First published: